இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும்
வடக்கு அந்தமான் தீவுகளுக்கு அருகிலுள்ள வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தப் பகுதி, அதே பகுதியில் நீடித்து இன்று (25) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வானிலைத் தொகுதி மேற்கு வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற்று, ஒக்டோபர் 25ஆம் திகதியளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், ஒக்டோபர் 26ஆம் திகதி காலை வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதியில் புயலாகவும் உருவாக அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வானிலைத் தொகுதியின் நேரடித் தாக்கம் இலங்கைக்கு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், அதனை நோக்கி வீசும் காற்றோட்டம் இலங்கையின் ஊடாகச் செல்வதால், அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




