ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் இந்த ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனத்தின்படி, ஜனாதிபதியின் ஒரே வருமானம் ஜனாதிபதிக்கான சம்பளம் மாத்திரமே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துக் கொடுப்பனவுகளையும் உள்ளடக்கிய வகையில், ஜனாதிபதியின் வருடாந்த வருமானம் 30 இலட்சத்து 81 ஆயிரத்து 624 ரூபாவாகும்.
குறித்த காலப்பகுதியில் ஜனாதிபதியின் மனைவியோ அல்லது மகனோ எவ்வித வருமானத்தையும் ஈட்டவில்லை என அந்தச் சொத்து விபரப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்ட நேரத்தில், ஜனாதிபதியின் மகனிடம் கையிருப்பாக 5,000 ரூபாவும், அவரது வங்கிக் கணக்கில் 2,500 ரூபாவும் இருந்துள்ளன.
அதேவேளை, ஜனாதிபதியின் மனைவியின் வங்கிக் கணக்கில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 888 ரூபா இருப்பதாகவும், அவரிடம் கையிருப்பாக 35,000 ரூபா இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய சொத்து விபரப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த, 2017ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட 1.5 கோடி ரூபா பெறுமதியான டொயோட்டா ஹைலக்ஸ் வாகனம், புதிய சொத்து மற்றும் பொறுப்புக்கள் பிரகடனத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சஜித் பிரேமதாசவின் நிதிச் சொத்துக்கள் குறைவு
இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனத்தின்படி, 2025ஆம் ஆண்டில் அவரிடம் இருந்த 2 கோடியே 96 இலட்சம் ரூபா பெறுமதியான நிதிச் சொத்துக்கள், தற்போது 2 கோடியே 35 இலட்சம் ரூபாவாகக் குறைந்துள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் மொத்தம் 18 தனிநபர் கடன்களைப் பெற்றுள்ளார். அவற்றில் 17 கடன்கள் லக்ஷ்மன் டி பொன்சேகா என்பவரிடமிருந்து பெறப்பட்டுள்ளன.
இவ்வாறு பெறப்பட்ட கடன்களின் மொத்தப் பெறுமதி 825 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாகும்.
மேலும், ஹேர்பர்ட் ஜயக்கொடி என்பவரிடமிருந்து 84 இலட்சம் ரூபா பெறுமதியான மற்றுமொரு கடனையும் அவர் பெற்றுள்ளார்.
சொத்து விபரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு
2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதி உள்ளிட்ட சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய நபர்களின் விபரங்கள் பொதுமக்களின் பார்வைக்காக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.




