புதிதாக அடையாளம் காணப்பட்ட பயனாளர்களுக்கான அஸ்வெசும நலன்புரி உதவித்தொகை கொடுப்பனவுகள் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட பட்டியலின் கீழ் தகுதியான பயனாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சபையின் தலைவர் நிமல் கொட்டவெலகெதர தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதேச செயலகங்கள் ஊடாக மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை மறுபரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இதற்காக ஒரு மாத காலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நிலைமைகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்ட விசேட கொடுப்பனவு, வறிய மற்றும் மிகவும் வறிய பிரிவுகளைச் சேர்ந்த பயனாளர்களுக்கு வழங்கப்படும் வழக்கமான அஸ்வெசும கொடுப்பனவுடன் இணைத்து வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




