– 2027 ஜூலை முதல் மாதாந்தம் ரூ.2,500 இடைக்கால கொடுப்பனவு
2025ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வுபெற்ற அனைத்து அரச ஊழியர்களுக்கும் உரிய ஓய்வூதிய உரிமைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஓய்வூதிய முரண்பாடுகள் முழுமையாகத் தீர்க்கப்படும் வரை, 2027 ஜூலை 01ஆம் திகதி முதல் மாதாந்தம் ரூ.2,500 இடைக்கால கொடுப்பனவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல நாடாளுமன்றத்தில் எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், 2028ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து, ஓய்வூதிய சமூகத்தினர் எதிர்கொள்ளும் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக சம்பள மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், குறித்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும் ஏதேனும் பிரச்சினைகள் நீடித்தால், அவற்றைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.




