அரசாங்கம் வரி மூலம் திரட்டும் நிதியை மீண்டும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காகப் பயன்படுத்துவதாக பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மக்களுக்காக எந்தவொரு வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்ற போதிலும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களின் வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், விவசாயம் மற்றும் எரிபொருள் மானியங்கள் ஆகியவற்றுக்காகப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, இவ்வாண்டு வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு 10 இலட்சம் ரூபா வழங்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு ஒரு வீட்டுக்கு 15 இலட்சம் ரூபா வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக வலுப்பெறும்போது அதன் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மொத்த செலவினத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள் 12 இலட்சம் பேருக்கு மாத்திரமன்றி, அரச சேவைக்கு வெளியே உள்ள பெருந்தொகையான மக்களுக்கும் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் அனைத்து நிதியையும் ஒதுக்க முடியாது எனத் தெரிவித்த அவர், அரச சேவையில் இல்லாமல் கூலித் தொழில் மற்றும் ஏனைய தொழில்களில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை முன்னெடுக்கும் மக்களுக்காகவும் வீடமைப்பு உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியுள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விலை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரிகள் குறித்து எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற போதிலும், வரி மூலம் திரட்டப்படும் நிதிக்கு மேலதிகமாக எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அரசாங்கம் பெருமளவு நிதியைச் செலவிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வரிகளைக் குறைப்பதன் மூலம் மாத்திரம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குப் பதிலாக, வரி மூலம் திரட்டப்படும் நிதியை மீண்டும் எரிபொருள் விலை உள்ளிட்ட பல்வேறு நிவாரணத் திட்டங்களுக்குப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் உரிய புரிதலின்றி எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைப்பதாகவும் குற்றஞ்சாட்டிய பிரதி அமைச்சர் டி.பி. சரத், வரி வருவாயைச் சேகரிப்பது மட்டுமன்றி, அந்த நிதியை மக்களின் நலன்புரி மற்றும் நாட்டின் அபிவிருத்திக்காக மீண்டும் பயன்படுத்துவதும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என மேலும் தெரிவித்துள்ளார்.




