இலங்கையில் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகளிடையே HIV தொற்றாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய்கள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு நிறைவடையும் போது, 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் புதிதாக 88 HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 78 பேர் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாலியல் நோய்கள் தடுப்புப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் மாதவி குணரத்ன, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு நிறைவடையும் போது, இலங்கையில் புதிதாக 708 HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
1987 ஆம் ஆண்டு இலங்கையில் முதலாவது HIV தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதிலிருந்து, இதுவரை மொத்தமாக 8,111 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளிலும் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் 88 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 78 பேர் 20 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




