கண்டி அக்குரணையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அக்குரணை நகரின் பாதுகாப்பு நேற்றிரவு முதல் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் 118 அவசர இலக்கத்திற்கு நேற்றிரவு அக்குரணை நகரில் சில நாசகார நடவடிக்கை இடம்பெறும் என தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அதன் பிரகாரம் உடனடியாக செயற்பட்ட பாதுகாப்பு தரப்பினர் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி குறித்த பகுதிக்கு விசேட பொலிஸ் குழுக்களை அனுப்பி வைத்துள்ளனர்.
தேவைப்பட்டால் அப்பகுதிக்கு மேலதிக இராணுவக் குழுக்களை அனுப்புவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் குழுக்கள் மறு அறிவித்தல் வரை அப்பகுதியில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு மாகாணங்களில் முழு ஹர்த்தால் நடத்தப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அன்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தமை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணி உரிமைகளை வேறு தரப்பினருக்கு வழங்குதல், வழிபாட்டுத் தலங்களின் பிரச்சனை, தொல்லியல் எச்சங்கள் என தமிழர்களின் நிலங்கள் சூறையாடப்படுவது உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து இந்த ஹர்த்தால் நடத்தப்பட்டதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
வடகிழக்கு மாகாணங்களில் முழு ஹர்த்தால் அன்றைய தினம் அனைத்து கடைகளையும் அடைத்து போக்குவரத்து நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அரச ஊழியர்களும் இந்த முழு ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்குமாறும் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 25ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால், அன்றைய தினம் நாடாளுமன்றத்திலும் போராட்டம் நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது மூன்றாக பிளவுபட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் குழுவும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் குழுவும் அதில் பிரதானமாக உள்ளதுடன், மற்றைய குழு ஜனாதிபதியுடன் பயணிப்பது பொருத்தமானது என்று கூறும் குழுவாகும்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது, போயா தினத்திற்கு முன்னர் மொட்டு எதிர்க்கட்சிக்கு செல்ல தயார் என பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பசில் ராஜபக்ஷ தேசியப்பட்டியலில் இருந்து மீண்டும் பாராளுமன்றத்திற்கு வரத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் மொட்டு எதிர்க்கட்சிக்கு செல்லும் திட்டம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை நாளை (ஏப்ரல் 19) பயங்கரவாத விசாரணைப் பிரிவில் (TID) ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதிப்புரட்சி குறித்த அவரது சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பான தகவல்களை பதிவு செய்வதற்காகவே அவர் TID முன் அழைக்கப்பட்டுள்ளார்.
காலி முகத்துவாரப் பகுதியை பொதுமக்கள் தமது ஓய்வு நேரத்தை செலவிடுவதற்கு மாத்திரம் ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, காலி முகத்திடலின் அழகைக் கெடுக்கும் அல்லது சேதப்படுத்தும் வகையிலான இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது ஏனைய செயற்பாடுகள் இனிமேல் அந்தப் பிரதேசத்தில் நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது.
இலங்கை துறைமுக அதிகாரசபையானது காலி துறைமுகத்தை சமூக பொறுப்புணர்வு திட்டமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்காக சுமார் 220 மில்லியன் ரூபாவை அதிகாரசபை செலவிடவுள்ளது. கடந்த போராட்ட காலத்தில் அந்த பகுதியில் ஏற்பட்ட சொத்து சேதங்களை சீர்செய்வதற்காக மாத்திரம் 6.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஏப்ரல் 20ஆம் திகதிக்குப் பின்னர் காலி முகத்திடல் பொதுமக்களுக்கு இலவச நேரத்துக்கும் விசேட சமய நடவடிக்கைகளுக்காகவும் வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
நிலுவையில் உள்ள அமைச்சரவை மாற்றம், பதவி காலம் முடிந்த ஆளுநர்கள் நியமனம் மற்றும் தற்போது வெற்றிடமாக உள்ள 12 தூதுவர்களின் நியமனம் ஆகியவற்றை ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்கத்தின் உயர்தர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த வட்டாரங்களின்படி, தற்போது பதவிக்காலம் முடிவடைந்துள்ள ஒன்பது ஆளுநர்களும் நீக்கப்பட உள்ளதாகவும், அவர்களில் சிலர் மீண்டும் நியமனம் செய்யப்படலாம் என்றும் தெரிகிறது.
மொட்டு கட்சி முக்கியஸ்தர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் 9 பேரில் ஐந்து பேரை மொட்டுவும் ஏனைய நால்வரை ஐ.தே.கவையும் நியமிக்க இணக்கம் காணப்பட்டது.
இதன்படி தற்போதுள்ள ஆளுநர்களில் ஐவரை நியமிக்குமாறு மொட்டு கட்சி கோரிக்கை விடுத்திருந்தது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்படவுள்ள ஆளுநர்களின் பெயர்கள் அன்றைய தினங்களில் ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்பட்டன.
இலங்கை 75 வருடங்களின் பின்னர் தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுதந்திரத்தின் போது நம்பிக்கைக்குரிய சமூக, பொருளாதார குறியீடுகளை கொண்டிருந்த இலங்கை, 75 வருடங்களின் பின்னர் தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலனித்துவ ஆட்சியாளர்களால் அழிவிற்குட்படுத்தப்பட்டு, 450 வருடங்கள் கடந்துள்ள போதிலும் சுதந்திரம் பெற்ற போது இலங்கை சிறந்த சமூக, பொருளாதார குறியீடுகளை கொண்டிருந்ததாகவும் 75 வருடங்களின் பின்னரும் இலங்கை தோல்வியடைந்த நாடாக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 'த ஹிந்து' பத்திரிக்கைக்கு வழங்கிய விசேட செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசியலில் அனைத்து மட்டங்களிலும் ஊழலே காணப்படுவதாகவும் நீதித்துறை, பொலிஸ் மற்றும் நிர்வாக சேவை உள்ளிட்ட ஜனநாயகத்தின் கோட்பாடுகள் சிதைவிற்குட்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
சுதந்திர இலங்கை பல்வேறு இனங்கள் மற்றும் ஒன்றிணைத்த கட்சிகளைக் கொண்ட அரசாங்கத்தை உருவாக்கத் தவறியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தததாக 'த இந்து' செய்தி செய்தி வெளியிட்டுள்ளது.
தெற்காசிய மன்ற நிறுவனமும் சென்னையிலுள்ள ஆசிய ஊடக கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்த மெய்நிகர் கலந்துரையாடலிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
பல பிரதேசங்களில் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதாகவும், இதனால் சிறுவர்கள், முதியவர்கள், தோல் ஒவ்வாமை உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் பெரிதும் பாதிக்கப்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரலாம் எனவும், அனைவரும் கடும் சூரிய ஒளியில் இருக்க வேண்டாம் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேல், தெற்கு, கிழக்கு, வடமத்திய, குருநாகல், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் அதீத வெப்பம் தொடர்பில் அனைவரும் அவதானம் செலுத்த வேண்டுமெனவும், அதிக வெப்பத்தினால் தோல் நோய்கள் ஏற்படக் கூடுமெனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுப்பது, வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிவது ஆகியவை வெப்பமான காலநிலையிலிருந்து பாதுகாக்க உதவும் என கருதப்படுகிறது.