காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் தாக்கப்படும்போது அதனை பொலிஸார் தடுக்க வேண்டாமென பொலிஸ்மா அதிபரும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் பொலிஸாருக்கு உத்தரவிட்டனர் என்பதே உண்மை என ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரமேஸ் பத்திரன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் தாக்கப்படுவதற்கு முன்னர் நான் மேல்மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசி ஊடாக அழைப்பை எடுத்து வன்முறைச் சம்பவம் தொடர்பில் எச்சரித்து இதனை பொலிஸார் தடுத்து நிறுத்த வேண்டும் என்றேன். அப்போது இதனை நாம் தடுத்து நிறுத்துவோம் என்றே தேசபந்து தென்னகோன் என்னிடம் கூறினார். எனினும் அலரிமாளிகையில் இருந்து வந்தவர்கள் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டோரைத் தாக்கினார்கள்.
இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க எனக்கு தொலைபேசியில் அழைப்பை எடுத்து இது தொடர்பில் கூறியதோடு, உடனடியாக ஜனாதிபதிக்கு இதனை அறிவித்து தடுத்துநிறுத்த வேண்டும் என கூறினார் என்றார்.
அப்போது நான் ஜனாதிபதியுடன் கூட்டமொன்றில் இருந்தேன். அங்குப் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னோடு இருந்தார்கள். உடனே விடயத்தை நான் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறியதும், அப்போதே தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் நான் காலையிலேயே கூறினேன் தானே இதனை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறியதற்கு பொலிஸ்மா அதிபர் கண்ணீர்புகைப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டாமென தனக்கு உத்தரவிட்டுள்ளதாக தென்னகோன் கூறினார்.
இதன்போது ஆத்திரமடைந்த ஜனாதிபதி நானே இந்நாட்டின் ஜனாதிபதி. நான் சொல்கிறேன் இதனை தடுத்து நிறுத்துங்கள் என ஜனாதிபதிக் கூறியதன் பின்னரே பொலிஸார் கண்ணீர்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர் எனவும் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.
எரிவாயுவிற்கான நெருக்கடிக்கு முழுமையான தீர்வு கிடைக்க மேலும் ஒன்றரை மாதங்கள் செல்லுமென லிட்ரோ நிறுவன தலைவர் கூறியுள்ளார்.
இதனிடையே, நிலவும் சீரற்ற வானிலையினால் ஏற்கனவே நாட்டை வந்தடைந்த கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தற்போதைய நிலைமையின் கீழ் நாளொன்றுக்கு 30,000 சிலிண்டர்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஓமானிலிருந்து எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று(19) நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தாய்லாந்தின் சியம் எரிவாயு நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் தாமதம் நிலவுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாரமளவில் குறித்த நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக லிட்ரோ தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில் இருந்த பழுப்பு நிற துப்பாக்கியும், வடமத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எச்.பி.சேமசிங்கவின் வீட்டில் இருந்த 60 பவுண் தங்க நகைகளும் திருடப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் விமான நிலைய வீதியிலுள்ள துமிந்த திசாநாயக்க மற்றும் எச்.பி.சேமசிங்க ஆகியோரின் இரு வீடுகள் கடந்த 9ஆம் திகதி தீக்கிரையாக்கப்பட்டதுடன் அவர்களது சொத்துக்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தின் போது துமிந்த திஸாநாயக்கவிற்கு பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பிரவுனிங் துப்பாக்கி அவரது வீட்டில் இருந்து திருடப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் எச்.பி.சேமசிங்கவின் வீட்டை சேதப்படுத்த வந்த நபர்கள் வீட்டின் அலமாரியில் இருந்த 60 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த ஆமதுருக்கள் அரசியலில் வேண்டாம். கைகூப்பி கோருகிறேன். இவர்கள்தான் இத்தனைக்கும் காரணம்.சும்மா இந்த வன்முறைகளைப் பற்றி, இந்த பக்கமும், அந்த பக்கமும் மாறி, மாறி குற்றம் சாட்டுவதில் பயனில்லை. அனைத்துக்கும் மூல காரணம் இந்த ஆமதுருகள்தான். இவர்களை பன்சலைக்கு அனுப்புங்கள். அரசியலில் இவர்கள் வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சபையில் இன்று ஆளும் கட்சி எம்பிகளின் மீது கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட வன்முறைகள் தொடர்பில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே சிங்கள மொழியில் ஆவேசமாக இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இன்றைய தினங்களில், 2009 ஆண்டில் தமிழ் மக்கள், நூறு, ஆயிர, இலட்சக்கணக்கில், கொல்லப்பட்டார்கள். கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்களில் கொல்லப்பட்டார்கள்.
இன்று ஆளும் அணி அமைச்சர்களின் வீடு, சொத்துகளை எரித்து கொலை செய்த இந்த வன்முறை, அமரகீர்த்தி என்ற அப்பாவி எம்பியை அடித்தே கொலை செய்த வன்முறைகள், இந்த யுத்தம் மற்றும் 1983, 1977, 1958 இனக்கலவரங்களிலேயே ஆரம்பித்தது. இந்த தீவைப்பு தமிழர்களாகிய எங்களுக்குப் புதிதல்ல. 1983 எங்கள் ஹவ்லக் வீதி வீட்டைக் கொளுத்தினார்கள்.
எங்கள் புறக்கோட்டை வியாபார நிலையத்தைக் கொளுத்தினார்கள். ஒரு கம்பீரமான திரைப்பட கலைஞரான என் தந்தை அதன்பின் மனமுடைந்து சில காலம் வாழ்ந்து இறந்து போனார். இதோ இந்த ஆசனத்தில்தான் என் நண்பன் ரவிராஜ் அமர்ந்திருந்தார்.
சிங்கள மக்களுக்குத் தமிழர் பிரச்சினையைச் சிங்களத்தில் சொல்ல முயன்றதற்காக ரவிராஜ் கொல்லப்பட்டார். அன்று நானும், ரவியும் சேர்ந்து பலவந்த கடத்தல், சட்ட விரோத படுகொலைகள், வெள்ளை வேன் கலாச்சாரத்துக்கு எதிராகப் போராடினோம்.
என்னையும், ராகமை, களுத்துறை, தெமட்டகொடை ஆகிய மூன்று இடங்களில் கொல்ல முயன்றார்கள். இந்த வன்முறை ஆட்டம்தான் இன்றும் தொடர்கிறது. முதல் அரசியல் கொலையை, 1959இல் பண்டாரநாயக்காவை கொலை செய்து, ஒரு பெளத்த ஆமதுரு ஆரம்பித்து வைத்தார். அதன்பின் பெளத்த மதத்தை அரசியலில் கலக்க விட்டு, இந்நாட்டை அழித்து விட்டீர்கள்.
இந்த ஆமதுருக்கள் அரசியலில் வேண்டாம். கைகூப்பிக் கோருகிறேன். இவர்கள்தான் இத்தனைக்கும் காரணம். நாம் ஆமதுருமார்களை பன்சலைக்கும், குருக்கள்மார்களை கோவிலுக்கும், இமாம்களை பள்ளிவாசல்களுக்கும், பாதிரிகளைத் தேவாலயங்களுக்கும் போகச் சொல்வோம். இவர்கள் இங்கே வேண்டாம். அரசியலில் வேண்டாம்.
களனி விகாரை ஆமதுரு சொன்னார். களனி கங்கை ஆறு இரண்டாகப் பிளந்ததாம். 'டோம்' என சத்தம் வந்ததாம். பாதாளத்திலிருந்து நாகராஜன் வந்தாராம். 'நாட்டை காக்க ஒரு மன்னன் வருகிறான்' என ஒரு அசரீரி கேட்டதாம். என்ன ஒரு கேலிக்கூத்து இது! இப்படி வெட்கமில்லாமல் சொன்ன அந்த ஆமதுரு இன்று களனி பல்கலைக்கழக உப வேந்தராம். வெட்கம்..!
சும்மா இந்த வன்முறைகளைப் பற்றி, இந்த பக்கமும், அந்த பக்கமும் மாறி, மாறி குற்றம் சாட்டுவதில் பயனில்லை. அனைத்துக்கும் மூல காரணம் இந்த ஆமதுருகள்தான். இவர்களை பன்சலைக்கு அனுப்புங்கள். எங்கள் குருக்கள், இமாம்கள், மாதிரிகள் ஆகியோரும் தத்தம் மத ஸ்தலங்களுக்குப் போக வேண்டும். நாடு உருப்படும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தரவு கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ் பிரதிகளை வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கோளாறினை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மறுசீரமைப்புக்குப் பிறகு இது மீண்டும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பான அறிவிப்பு பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 09 ஆம் திகதி காலிமுகத்திடலில் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டார்.
இலங்கைத் தமிழர்களுக்கு தூத்துக்குடி யாசகர் இந்திய ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறை சேர்ந்தவர் பாண்டி (65). யாசகரான இவர் கொரோனா நிவாரண உதவியாக 10 ஆயிரம் வீதம் பல முறை நிதி உதவி வழங்கியுள்ளார். இவர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது இலங்கைத் தமிழர் நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரத்தை கலெக்டர் விசாகனிடம் வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘நான் பல ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் பணியாற்றினேன். அப்போது அங்கு பல சமூக சேவைகள் செய்துள்ளேன்.
2 ஆயிரம் மரங்களுக்கு மேல் நட்டுள்ளேன். இச்சூழ்நிலையில் மீண்டும் தமிழகம் வந்து யாசகம் செய்து, அதில் கிடைத்த பணத்தை 400க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு தளவாட பொருட்கள் வழங்கி உள்ளேன். மேலும் கொரோனா நிதி உதவியை மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, நாகர்கோவில் உள்ளிட்ட கலெக்டர்களிடம் வழங்கி உள்ளேன். தற்போது திண்டுக்கல் கலெக்டர் விசாகனிடம் இலங்கை தமிழர்களுக்காக ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கியுள்ளேன்’’ என்றார்.
புதிய பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அஜித் ராஜபக்ஸவிற்கு ஆதரவாக 109 வாக்குகளும் ரோஹினி கவிரத்னவிற்கு ஆதரவாக 78 வாக்குகளும் கிடைத்துள்ளதுடன், 23 வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்று(17) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானது.
இதன்போது குறித்த இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதையடுத்து, புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பிரதி சபாநாயகர் பதவிக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் ரோஹினி கவிரத்ன மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் அஜித் ராஜபக்ஸ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து, பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகியது.
நாட்டின் மேல், சப்ரகமுவ, வட மேல், மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று(17) 100 மில்லி மீட்டர் வரையான மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனைத்தவிர, வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, காங்கேசன்துறை தொடக்கம் புத்தளம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அடுத்த 24 மணித்தியாலத்திற்குள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.