ஏழு மூளை கொண்டவர் என அழைக்கப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று பகல் 1 மணி தொடக்கம் மோட்டார் சைக்கிளுக்கு 1000 ரூபாவிற்கும் முச்சக்கர வண்டிக்கு 1500 ரூபாவிற்கும் கார் ஜீப்களுக்கு 5000 ரூபாவிற்கும் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
பஸ், லொறி, வர்த்தக தேவை வாகனங்களுக்கு கட்டுப்பாடு கிடையாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
கொழும்பு காலிமுகத் திடலில் போராட்டத்தை நடத்தி வருபவர்கள், போராட்டம் நடத்தப்படும் இடத்தில் உள்ள குப்பைகளை பைகளில் சேகரித்து வெளியில் கொண்டு செல்ல தயாராக வைத்துள்ளளனர்.
குப்பைகள் கறுப்பு பைகளில் பொதி செய்து வைக்கப்பட்டுள்ளதுடன் அந்த பொதிகளுக்கு சிகப்பு நிற சால்வையை அணிவித்து, காலிமுகத் திடலில் வரிசையாக காட்சிக்கு வைத்துள்ளனர்.
ராஜபக்ச குடும்பத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தவிர ஏனையோர் குரக்கன் சால்வையை அணிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவியில் இருந்து விலக கோரி நடத்தப்படும் இந்த போராட்டம் இன்று 7வது நாளாகவும் தொடர்ந்தும் நடைபெறுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஏற்கனவே குப்பைகள் சேகரிக்கும் வாளிகளில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட சில அரசியல்வாதிகளின் புகைப்படங்களை ஒட்டி வைத்திருந்தனர்.
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக பிரசாத் காலி முகத்திடல் போராட்ட களத்திற்கு வந்து சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்துள்ளார்.
24 மணித்தியாலங்களாக உண்ணாவிரதம் இருந்து இந்த சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரியே தாம் இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
மக்கள் ஏன் அரசாங்கத்தின் மீது கோபமாக உள்ளனர் என்பது தமக்கு புரிகிறது என தெரிவித்த முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி மௌனம் கலைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இப்போது கோபத்திற்கான நேரம் மட்டுமல்ல, தீர்வுக்கான நேரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகமொன்று வழங்கிய செவ்வியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதியும் அரசாங்கமும் நாட்டிற்கான திட்டங்கள் குறித்து இன்னும் வெளிப்படையாக குரல் கொடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அதைச் சமாளிப்பதற்கான அவரது திட்டங்கள் குறித்து விளக்கமளித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் தேவையான அளவுக்கு வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவில்லை என்பதையும் ஜனாதிபதியின் மௌனம் தற்போதைய நிலைமைக்கு உதவவில்லை என்பதையும் ஏற்றுக்கொண்ட நாமல், “ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி தனது திட்டங்களை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அத்தோடு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களின் உரிமையை என்றாலும் அத்தகைய கோபம் பயனற்றதுடன், நெருக்கடியை உருவாக்கக்கூடும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று மற்றும் சட்டநடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பல தடவைகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டவர் 1999 இல் சட்டவிரோத மரக்கடத்தலிற்காகவும் 2013 இல் போதைப்பொருள் வைத்திருந்தமைக்காகவும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பொலிஸ் தலைமையகம் விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இலங்கைக்குத் தேவையான உணவு மற்றும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காகஇ லங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
நாங்கள் நிச்சயமாக அவர்களுக்கு உதவ விரும்புகிறோம், மேலும் அதிக இடமாற்று வரிகள் மற்றும் கடன்களை வழங்க தயாராக இருக்கிறோம்" என்று இலங்கையுடனான பல்வேறு கலந்துரையாடல்களை அறிந்த புதுடில்லியில் உள்ள ஒரு இந்திய மூத்த அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது.
தெற்கு அண்டை நாடு சீனாவை நம்பியிருப்பதைக் குறைக்க புதுடில்லி ஆர்வமாக இருப்பதாகவும் இலங்கை சீனாவுடன் சுமார் $3.5 பில்லியன் கடனைக் கொண்டுள்ளது
அவர்கள் சீனாவிடமிருந்து கடன் அளவைக் குறைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், மேலும் நாங்கள் வலுவான பங்காளிகளாக மாற விரும்புகிறோம் என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பியசேன கமகேவுக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட எரிபொருள் பவுசர் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் அவரது தவலம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட 13,000 லீற்றர் பெற்றோல் அடங்கிய பௌசர் அவரது தேயிலை தொழிற்சாலையில் மறைத்து வைக்கப்பட்டு இரவோடு இரவாக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிரப்பு நிலையம் நேற்று இரவு சீல் வைக்கப்பட்டு தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
புதிய அமைச்சரவை உருவாக்கம் அடுத்த வாரம் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கீழ் குறைந்தபட்ச அமைச்சரவையுடன் புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இடைக்கால அரசாங்கத்தையோ, கூட்டு அரசாங்கத்தையோ அல்லது தேசிய அரசாங்கத்தையோ நியமிக்குமாறு கோரிக்கை விடுத்தும் அது நிறைவேறவில்லை.
அரசாங்கத்தின் 11 கூட்டாளிகளும் அமைச்சரவையை நியமிப்பதில் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற உத்தேசித்துள்ள போதிலும், சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இடைக்கால அரசாங்கத்தின் கீழ் அரசாங்கமொன்றை அமைப்பதே அந்தக் கட்சிகளின் கருத்தாகும்.
ஆசியன் மிரர் வாசகர்கள் அனைவருக்கும் இனித் தமிழ்- சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள்..!