ஜனாதிபதித் தேர்தலின் போது சமூக ஊடகங்களின் ஊடாக பொய்ப்பிரசாரங்கள் மற்றும் வெறுப்பூட்டக் கூடிய பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்பான கஃபே அமைப்பு (CAFFE) தெரிவித்துள்ளது.
இதேவேளை 2019 ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது என கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான மனாஸ் மக்கின் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதாவது தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதிகளில் சமூக ஊடகங்கள் தொடர்பில் கஃபே அமைப்பின் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்படி, 5 வேட்பாளர்களை இலக்கு வைத்து வெறுப்பூட்டக்கூடிய பிரசாரங்கள், பொய்யான செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பகிரப்படுகின்றமை தெரியவந்துள்ளது.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்குத் தடையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சமூக ஊடகங்களின் மூலம் பொய்யான மற்றும் வெறுப்பூட்டக் கூடிய பிரசாரங்களால் வன்முறை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகலாம் என கஃபே அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் வட்ஸ் அப் குழுமங்களிலும், முகநூல் குழுமங்களிலும் இதுபோன்று பொய்ப்பிரசாரங்கள் மற்றும் வெறுப்பூட்டுகின்ற பிரசாரங்கள் தொடர்பில் பாதகமான காணொளிப் பதிவுகள் பரப்பப்பட்டு வருகின்றன.
அதேபோன்று ஒரே குழுவில் பல்வேறு அரசியல் கருத்துக்களை முன்வைப்பவர்கள் உள்ளதால் இவ்வாறானவர்கள் தங்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதாகவும், இவை வன்முறையாக மாறக்கூடும் எனவும் கஃபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாகத் தேர்தலுக்கு இடையூறு விளைவிக்கும் இதுபோன்ற பதிவுகள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்கள் மூலம் பகிர்வதைத் தவிர்க்குமாறு கஃபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கின் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் கட்சிகள் இணைந்து உருவாக்கிய "பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி” அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில், பத்தரமுல்லை வோட்டர் எட்ஜ் ஹோட்டலில் இந்த நிகழ்வு இன்று (05) காலை நடைபெற்றது.
இந்த கூட்டியின் சின்னம் “கிண்ணம்” என அறிவிக்கப்பட்டு "பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி" உத்தியோகப்பூர்மாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்த புதிய கூட்டணிக்கு அமைச்சர் ரமேஷ் பத்திரன செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்காமல் நடுநிலை வகிக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளார்.
இம்முறை தாம் பல்வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் வௌிவந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் தாம் ஆதரவு வழங்கவில்லை எனவும் எதிர்காலத்திலும் அவ்வாறு செய்வதற்கு எதிர்ப்பார்ப்பு இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னொருபோதும் இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் தற்போது போன்ற நிலையற்ற தன்மையும் சவாலும் இருந்தது இல்லை என அவர் கூறியுள்ளார்.
இந்த பாரதூரமான நிலைமை தொடர்பாக அனைத்து வாக்காளர்களும் சிந்திக்க வேண்டியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தனி நபர் தொடர்பில் அல்லாமல் ஒவ்வொரு வேட்பாளரும் முன்வைத்துள்ள திட்டங்கள், கொள்கைகள், அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்களிடமுள்ள திட்டங்கள், நடைமுறைகள், அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த இருப்பவர்களின் இயலுமை என்பன குறித்து வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முக்கியத்துவம் வழங்கவும் கல்வி. சுகாதாரம் , விவசாயம். கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள், சர்வதேச வர்த்தகம் ஆகிய விடயங்கள் தொடர்பாக முக்கியத்தும் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேர்மை, நல்லாட்சி, ஊழல் ஒழிப்பு மற்றும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் உறுதிமொழி கோரும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ளதெனவும் முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சி முறையின் நேர்மை மற்றும் பொறுப்புக் கூறலை கோரி 2 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமான பாரிய மக்கள் போராட்டம் மாற்றத்தை கோரியதை மறக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமகி ஜன பலவேகவின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் எவ்வித உடன்பாடும் ஏற்படத் தயாராக இல்லை என சமகி ஜன பலவேகய தெரிவித்துள்ளது.
சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணையவுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த வதந்தி ஆளும் கட்சியின் குழுவினால் பரப்பப்படுவதாகவும், சஜித் பிரேமதாசவின் நிச்சயமான வெற்றியைக் கண்டு தேசிய மக்கள் சக்தியும் அந்தக் கதைகளை பரப்பி வருவதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, அவ்வாறானதொன்று நடக்காது என்பதை உறுதிப்படுத்துவதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
இலங்கை பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தால் (SLITAD) சமீபத்தில் நடத்தப்பட்ட, மக்கள் மேம்பாட்டு விருதுகள் 2023/24 இல் (People Development
Awards 2023/24) HNB பொதுக் காப்புறுதி (HNBGI) நிறுவனம் மதிப்புமிக்க வெள்ளி விருதைப் பெற்றுள்ளது. இந்த மதிப்பிற்குரிய அங்கீகாரத்தைப் பெறுவதற்காக
போட்டியிட்ட வலுவான 19 நிறுவனங்களின் வரிசையில், ஒரேயொரு பொதுக் காப்புறுதி வழங்குனர் எனும் வகையில HNBGI நிறுவனம் தனித்துவம்
பெறுகின்றது.
SLITAD மக்கள் மேம்பாட்டு விருதுகள் என்பது ஊழியர்களின் மேம்பாட்டில் சிறந்து விளங்கும் நிறுவனங்களைக் கொண்டாடும் ஒரு வருடாந்த
நிகழ்வாகும். இது விரிவான மனித வள மேம்பாட்டு (HRD) முயற்சிகளில் மூலோபாய ரீதியாக முதலீடு செய்பவர்களை அங்கீகரிக்கிறது. உலகளாவிய
மற்றும் பிராந்திய ரீதியான சிறந்த நடைமுறைகளுடன் இணைந்து, வளர்ச்சி, புத்தாக்கம், மனிதவள உத்திகளில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை
ஊக்குவிக்கும் நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த விருதுக்கான மதிப்பீட்டுச் செயன்முறையானது, வணிகம், கற்றல் செயற்பாடு மற்றும் மேம்பாடு, மக்கள் முகாமைத்துவம், தலைமைத்துவம்
மற்றும் முகாமைத்துவம், முகாமைத்துவ திறன், அங்கீகாரம், வெகுமதி போன்ற பல்வேறு மூலோபாய அம்சங்களை மையமாகக் கொண்டு, மிகக்
கூர்மையாகவும் விரிவாகவும் ஆராயப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றது. மதிப்பீட்டுச் செயன்முறையின் ஒருமைப்பாடு மற்றும் நம்பகத்தன்மையை
உறுதி செய்யும் வகையில், சிரேஷ்ட கணக்காய்வாளர்களால் நடத்தப்படும் சுயாதீன கணக்காய்வு நடவடிக்கைகள் மூலம் வெற்றியாளர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
HNB பொதுக் காப்புறுதி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சித்துமின ஜயசுந்தர இது பற்றித் தெரிவிக்கையில், "SLITAD People Development
Awards இல் வெள்ளி விருதைப் பெறுவதில் நாம் பெருமையடைகிறோம். இந்த அங்கீகாரமானது, எமது மனிதவள செயன்முறைகளை விரிவான பணியாளர்
மேம்பாட்டுடன் சீரமைப்பதில் HNBGI நிறுவனத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். மக்கள் (ஊழியர்கள்) கையாளல்
விடயத்தில் நாம் கொண்டுள்ள உத்திகள் அது மாத்திரமன்றி வணிகச் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக செம்மைப்படுத்துவதன் மூலம், நாம்
தனிமனித வளர்ச்சியை மட்டும் மேம்பாடடையச் செய்யவில்லை என்பதோடு, சிறந்த கலாசாரம் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றம் ஆகியவற்றையும்
மேம்படுத்துகிறோம். இது காப்புறுதித் துறையில் ஒரு முன்னோடி எனும் எமது நிலையை மேலும் வலுப்படுத்துகிறது என்றார்.
HNB பொதுக் காப்புறுதியின் மனிதவளப் பிரிவின் தலைவர் மல்ஷா முனசிங்க தெரிவிக்கையில், “மக்கள் மேம்பாட்டு தொடர்பான இந்த விருதை
வென்றமையானது, எமது குழு உறுப்பினர்களை மேம்படுத்தவும் வலுவூட்டவும் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். இது
அங்கீகாரம் மட்டுமல்ல, மக்கள் (ஊழியர்கள்) வளரவும், கற்றுக்கொள்ளவும் அவர்களின் முழுத் திறனை அடையக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு நாம்
கொண்டுள்ள மதிப்புகளை உறுதிப்படுத்துவதற்கான ஒரு அங்கீகாரமாகும். தொடர்ச்சியான கற்றல் மற்றும் மேம்பாடு ஆகியவற்றை எமது நிறுவனத்தின்
கட்டமைப்பில் உட்பொதிக்கப்பட்ட ஒரு கலாசாரத்தை உருவாக்குவதில் எமது கவனம் உள்ளது. இந்த விருது எமது முகாமைத்துவத்தின் கூட்டு முயற்சி
என்பதோடு, ஒவ்வொரு பணியாளரின் வளர்ச்சி மற்றும் சிறந்து விளங்கும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பிரதிபலிப்புமாகும்." எனறார்.
இந்த அங்கீகாரம் HNBGI நிறுவனத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இது நெகிழ்ச்சி மற்றும் ஆற்றல்மிக்க பணியாளர்களை
உருவாக்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. நிறுவனம் அதன் ஊழியர்கள் மீத தொடர்ச்சியாக
முதலீடு செய்து தனது உத்திகளைச் செம்மைப்படுத்துவதால், HNBGI அதன் அனைத்து முயற்சிகளிலும் புத்தாக்கம், வலுவூட்டல் மற்றும் சிறந்து
விளங்குவதன் மூலம் வெற்றியை ஏற்படுத்துவதற்கான அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.
HNB General Insurance பற்றி:
HNB பொதுக் காப்புறுதியானது, இலங்கை முழுவதிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு வாகனம் முதல் வாகனம் அல்லாத
மற்றும் தக்காபுல் தீர்வுகள் வரை பல்வேறு வகையான காப்புறுதித் தேவைகளை பூர்த்தி செய்கின்ற அர்ப்பணிப்புள்ள பங்காளியாகும். HNB
Assurance PLC இன் துணை நிறுவனமமும், HNB குழுமத்தின் ஒரு அங்கத்தவருமான HNB General Insurance ஆனது, பரந்த அளவிலான கிளை
வலையமைப்பின் மூலம் செயற்படுவதன் மூலம், நாடு முழுவதும் விரிவான சேவை வழங்கலை உறுதி செய்கிறது. Fitch Ratings Lanka Limited இன் ‘A- (lka)’
இன் காப்புறுதி நிதி வலிமை மதிப்பீட்டின் மூலம், புத்தாக்கம், சிறந்த உபசரிப்புடன், பங்குதாரர்களுக்கு நிலைபேறான மதிப்பை உருவாக்க HNB
General Insurance உறுதி பூண்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுக்கும் வகையில் சதித் திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் பிளவு காணப்பட்டாலும் அவர்களது தரப்பிற்கு இடையில் ஒன்று சேர்வதற்கான பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
எவ்வகையான திட்டமிடுதலுக்கும் காலதாமதம் ஆகிறது என்றும், இரு கட்சிகளும் பிரிந்து போட்டியிடுவது பாதகமாகவும், தேசிய மக்கள் படைக்கு சாதகமாகவும் இருப்பதால், ஒன்றிணைய வேண்டும் என்று ஆலோசித்து வருவதாகவும் அநுர கூறினார்.
மேலும், யார் பந்தயம் கட்டினாலும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுக்க முடியாது என்றும் வெற்றி நிச்சயம் என்றும் கூறினார்.
ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் இரண்டாவது வினாத்தாள் நடைபெறும்.
அன்று காலை 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரை முதலாவது வினாத்தாள் நடைபெறும்.
பரீட்சைக்காக விண்ணப்பித்தவர்களின் அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை ஆவணங்கள் கிடைக்காத அதிபர்கள் www.doenets.lk அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்திற்குச் சென்று ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
குறிப்பிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் தகவல்கள் திருத்தப்பட வேண்டுமானால், இன்று 02 ஆம் திகதி முதல் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை ஒன்லைனில் திருத்தம் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
தொலைபேசி இலக்கங்கள் – 0112 784 208/ 278 4537 / 2784537 / 2786616 /2785413, அவசர இலக்கம் – 1911, தொலைநகல் – 0112 784422
இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்தார்.
உலக சந்தையில் LP எரிவாயுவின் விலை அதிகரித்த போதிலும் Litro உள்நாட்டு LP எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாது என Litro Gas இன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் LP எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், மக்கள் நட்பு நிறுவனம் என்ற வகையில், உள்நாட்டு எரிவாயு எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
உலகச் சந்தையில் விலை குறைவாக இருந்தபோது வாங்கப்பட்ட கேஸ் வரவிருக்கிறது, எனவே தற்போது விலை திருத்தம் செய்யத் தேவையில்லை என்று அவர் கூறினார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் நாட்டை விட்டு வெளியேற இரண்டு மாத பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (01) முதல் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் ஆட்பதிவு , சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு அதிகார சபையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழில் வழங்குனரின் சட்டப்பூர்வ அனுமதியின்றி பணியிடத்திலிருந்து விலகி இருப்பவர்கள் மற்றும் செல்லுபடியாகும் விசா இல்லாதவர்கள் இந்த பொது மன்னிப்புக் காலத்தில் அபராதம் அல்லது பிற சட்டத் தடைகளுக்கு உட்படாமல் நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது சம்பந்தப்பட்ட விசா ஆவணங்களை சட்டப்பூர்வமாக செயல்படுத்தவோ வாய்ப்புள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் பொது மன்னிப்புக் காலத்தின் போது தமது விசாக்களை சட்டப்பூர்வமாக ஏற்பாடு செய்ய அல்லது இலங்கைக்கு திரும்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.