பொலிஸ் சோதனைகள், நடவடிக்கைகள், சந்தேக நபர்களின் விசாரணைகள், கைதுகள் போன்றவற்றின் வீடியோக்கள் மற்றும் படங்கள் ஊடகங்கள் மூலம் பகிரங்கமாக வெளியிடுவதைத் தடை செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையத் தளபதிகளுக்கும் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மீனகாயா ரயிலில் ஒரு குழந்தையை கைது செய்து விசாரணை செய்யும் வீடியோ காட்சிகள் அனைத்து முக்கிய ஊடகங்களிலும் பரப்பப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் விசாரணைக்கு உட்படுத்தப்படும் விதம் தொடர்பில் ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்வதால் சந்தேகத்திற்குரிய நபரை தர்மசங்கடப்படுத்துவதுடன் பொலிஸ் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பொலிஸார் மேற்கொள்ளும் சோதனைகளுக்கு ஊடகவியலாளர் குழுவை அழைத்துச் செல்வதை நிறுத்துமாறு பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை கிரிந்த பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக அது பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோமரங்கடவல பகுதியிலும் நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இவ்வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 40 வது பிரிவின்படி, ஐந்தாண்டுகளின் முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு பதில் ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 40 வது பிரிவின் விதிகளின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு மட்டுமே அவர் அல்லது அவள் இரண்டாவது தவணைக்கு போட்டியிட்டால், முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு வருடம் முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த அதிகாரம் உள்ளது எனவும் கோட்டாபய ராஜபக்ச இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு ஜனாதிபதித் தேர்தலை நடத்தியிருக்க முடியும் என்று கூறிய அவர், பதில் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அத்தகைய அதிகாரம் இல்லை என்றும் கூறினார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்துவது ஏற்புடையதல்ல எனவும், ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவாக உள்ளதாகவும் இலங்கை தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) முடிவடைவதால், கூடிய விரைவில் தேர்தலை நடத்துவது அவசியம் எனவும் ,எந்த சூழ்நிலையில் இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்துவது ஏற்புடையதல்ல ,
இந்த உள்ளுராட்சி மன்றங்களை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் நீண்டகாலம் நடத்துவது ஏற்புடையதல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆகக் குறைந்தது 3, 4 மாதங்களுக்குள் இந்தத் தேர்தல்கள் நடக்கும் என்று நம்புகிறேன். ஏப்ரல் 25 ஆம் தேதி தேர்தலை நடத்தினால் மிகவும் நல்லது. ஆனால் இப்போது அது கடினம் என்று தெரிகிறது. ஏனென்றால் தபால் ஓட்டுக் கூட தேவையானா பேலேட் பேப்பர்கள் எங்களிடம் இல்லை.அரசாங்க அச்சுத் திணைக்களத்திடம் இருந்து வாக்குச் சீட்டுகள் கிடைத்த பிறகுதான் தேர்தலை நடத்த முடியும் என இலங்கை தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அச்சுவேலி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் தங்கையுடன் உடலுறவு வைத்து குழந்தை உருவாக காரணமான அண்ணனை 14 நாட்கள் விளக்கமறியளில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
22 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில் அவரது தாய் வைத்தியசாலைக்கு அழைத்து சென்று கருவை அழிக்க முற்பட்டுள்ளார்.
இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு வைத்தியசாலை பொலிஸாரினால் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
எனினும் தங்கை கர்ப்பம் அடைந்ததற்கும் தனக்கும் தொடர்பில்லை என சந்தேக நபர் கூறி வந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தனர்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த தமது ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவுக்காக 60 மில்லியன் ரூபாவை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
OT கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக, பணியாளர் அதிகாரிகளுக்கான விடுமுறைக் கொடுப்பனவுகளுக்கு (ரூ. 12.8 மில்லியன்), சேவைக்காகத் திரும்ப அழைக்கப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் (ரூ. 2.2 மில்லியன்) மற்றும் அலவன்ஸுடன் கூடிய சாதாரண ஊதியம் (ரூ. 12.7 மில்லியன்) ஆகியவற்றுக்கான நிதியை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியிடம் இந்த நிதிக்கான கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
திறைசேரி தேர்தலுக்கு என மார்ச் 14 முதல் 100 மில்லியன் முதல் தவணையாக விடுவிக்கப்பட்டதை தவிர மீதி நிதி வழங்காமல் தடுமாறும் நிலையில் மேலதிக நேர நிதியை விடுவிக்க தேர்தல் ஆணைக்குழுவால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த பிரதேசங்களின் மலைப்பாங்கான மற்றும் சரிவான பிரதேசங்களில் வாழும் மக்கள் மண்சரிவு அறிகுறிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் குறிப்பிட்டுள்ளது.
திருகோணமலை கோமரன்கடவல பிரதேசத்தில் சிறிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகியுள்ளது.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் படி, கிரிந்தவில் இருந்து ரிக்டர் அளவுகோலில் 2.6 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதேவேளை ஈக்வடோர் நில நடுக்கத்தில் இதுவரை 17 பேர் வரை உயிரிழந்தனர்.
போராட்டத்தின் போது பெண்கள் பிரதான வீதியில் இருந்து உள்ளாடைகளை கழட்டி அகற்றி நாட்டின் சட்டம் ஒழுங்கை சீரழித்ததாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கின்றார்.
எனவே, தேர்தலை நடத்துவதற்கு முதலில் நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்று கூறும் அவர், தேர்தலை நடத்துவதா வேண்டாமா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதியின் முயற்சியின் கீழ் தற்போது சில நிர்வாகங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நாடு ஓரளவு ஸ்திரத்தன்மை பெற்று வருவதாகவும் அதற்காக எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் மக்கள் தீர்மானங்கள் அல்ல எனவும் அவர் கூறுகிறார்.
2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணையின் 1 ஆம் கட்டத்தின் பாடசாலை விடுமுறைகள் ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதல் பாடசாலை தவணை இரண்டாம் கட்டம் ஏப்ரல் 17 திங்கட்கிழமை தொடங்கி மே 12 வெள்ளிக்கிழமை வரை தொடரும்.
பொதுத் தேர்வுக்கான இரண்டாம் கட்ட விடுமுறை மே 13 முதல் மே 24 வரை அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதல் பாடசாலை தவணையின் மூன்றாம் கட்டம் மே 25 வியாழன் முதல் ஜூலை 20 வியாழன் வரை அமுல்படுத்தப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
மூன்றாம் கட்ட விடுமுறை ஜூலை 21 முதல் ஜூலை 23 வரை வழங்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைகளின் செயல்பாடுகள் குறித்தும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.