பாகிஸ்தான் – பலுசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், இடிபாடுகளில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் இதில் பெருமளவானோர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த நில நடுக்கத்தால் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.அத்துடன் இந்த சம்பவத்தில் அதிகளவில் பெண்களும் சிறுவர்களுமே உயிரிழந்துள்ளதாக ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
அத்துடன் காயமடைந்தவர்கள் வீதிகளில் வைத்து கைபேசிகளின் வெளிச்சத்தின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதாக அந்த செய்திச் சேவை மேலும் தெரிவித்தது.
சுமார் 100 வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் பாரிய கட்டடங்கள் பெரும் சேதமடைந்துள்ளதாகவும் மக்கள் வீடுகளை இழந்து செய்வதறியாது உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.