web log free
May 12, 2025
kumar

kumar

2019 ஆம் ஆண்டு தாம் பிரதமராக இருந்த போது  இலங்கை பொருளாதாரம் ஆரோக்கியமான நிலையில் இருந்ததாகவும் தாம் பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறும்போது டொலர் போதுமான அளவில் இருந்ததாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எங்களது ஆட்சிக் காலத்தில் இது போன்ற நெருக்கடி (பொருளாதார நெருக்கடி) ஒருபோதும் நடக்கவில்லை. எங்களது ஆட்சி நடைபெற்றபோது அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்கள் வரிசையில் நிற்கவில்லை என்றும், நிதி சவால்களை கையாள்வதில்  கோட்டாபய ராஜபக்ச அரசின் திறமையின்மையால் தற்போது மக்கள் அவதிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கை அரசிடம் போதிய வளங்கள் கையிருப்பில் இருப்பதாக தாம் நினைக்கவில்லை என்றும் கோட்டாபய அரசாங்கம் முன்னணி ஏற்றுமதி நிறுவனங்களிடம் கடன் வாங்க முயற்சிப்பதாகவும்  இதனால் இலங்கையை மேலும் சிக்கலுக்கு உள்ளாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் சீனா புதிய முதலீடுகள் எதையும் செய்யவில்லை என்றும்,  இந்தியா, இலங்கைக்கு அதிகபட்ச உதவிகளை செய்துள்ளதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
 

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று கூடிய SJB நாடாளுமன்றக் குழு, 20ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான தனிநபர் சட்டமூலத்தை முன்வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுத்துச் செல்வதற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று அங்கீகாரம் பெறுவதற்கும் குழு தீர்மானித்துள்ளதாக கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் எதிர்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

"எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விரைவில் ஏனைய கட்சிகளின் எம்.பி.க்களை சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெறுவார். சில SLPP எம்.பி.க்கள் மற்றும் சுயேச்சையாக மாறத் தீர்மானித்தவர்களின் ஆதரவைத் திரட்ட முயற்சிப்பதால் எண்ணிக்கையில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்" என்று கிரியெல்ல கூறினார். 

ஜனாதிபதியின் அதிகாரங்களை நீக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புத் திருத்தம் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் பிரேமதாசவினால் முதலில் வலியுறுத்தப்பட்டது.

தங்கொட்டுவ மற்றும் வென்னப்புவ ஆகிய பகுதிகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள காத்திருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

தங்கொட்டுவ- நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இரண்டு நாள்களாக எரிபொருளுக்காக காத்திருந்த தனியார் பஸ் சாரதியொருவர், திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில், நேற்று (9) உயிரிழந்துள்ளார்.

அத்துடன் தங்கொட்டுவ – தம்பரவில எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வந்திருந்த 50 வயது நபர் ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

குற்றப் பிரேரணை மற்றும் நம்பிக்கையில்லா பிரேரணை என்பன தயார் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தேவையான கையொப்பங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இரண்டு முன்மொழிவுகளுக்கும் பெரும்பான்மை வாக்குகள் போதுமானதாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

இரண்டு பிரேரணைகளுக்கும் ஆதரவளிக்க ஆளும் கட்சியின் பல பின்வரிசை உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இந்த பிரேரணைகளுக்கு ஆதரவளிப்பது அவர்களின் பொறுப்பு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எரிபொருள் விலைகள் மற்றும் வரி விகிதங்கள் அடுத்த ஆறு மாதங்களில் அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சீனா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திலும் உதவி கேட்கத் தயாராக இருப்பதாக அவர் ராய்ட்டர் செய்தி சேவையிடம் தெரிவித்தார்.

சர்வதேச இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைக்க இலங்கை தயாராகி வருவதாகவும், கடனை திருப்பிச் செலுத்துவதற்கான சலுகைக் காலத்திற்கு விண்ணப்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜூலை மாதம் செலுத்த வேண்டிய $1 பில்லியன் கடன் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

அடுத்த ஐந்து வாரங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உலக சந்தையில் தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது.  அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் தற்போதைய விலை 1,945 அமெரிக்க டொலர்களாக உள்ளது.

இதனிடையே, இந்தியாவிலும் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது, இந்தியாவில் திருமண சீசன் தொடங்கியுள்ளது.

இதேவேளை, இலங்கை தங்க சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்து வருகின்றது. 

22 கெரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 166,000 மற்றும் 24 காரட் தங்கம் ரூ. 180,000 ஆக காணப்படுகிறது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதற்காக எடுத்த தீர்மானம் இரண்டு அமைச்சர்களின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 4ஆம் திகதி அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்வதற்கு முன்னதாக பிரதமருடனான சந்திப்பின் போது பிரதமர் தனது முடிவை அறிவிக்க இருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட பலரது வற்புறுத்தலின் பேரில் பிரதமர் இந்த முடிவை மாற்றியுள்ளார்.

பிரதமர் பதவி விலகினால் தானும் அரசியலில் இருந்து விலகுவேன் என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

பிரதமர் தனது ராஜினாமா கடிதத்தை ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த நிலையில், அழுத்த நிலைமை காரணமாக அது கிடப்பில் போடப்பட்டது.

பின்னர் பிரதமர் தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் அரசாங்கத்தையும் பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நள்ளிரவு தாண்டி இன்று காலையும் தொடர்கிறது. 

மழையுடன் கூடிய காலநிலை காணப்படுகின்ற போதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மழையில் நனைத்தபடி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

அதன் புகைப்படங்கள் சில வருமாறு, 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று, அந்நாட்டு அதிபர் பாராளுமன்றத்தைக் கலைத்தார்.
 
பாராளுமன்றத்தைக் கலைத்த அதிபரின் உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிந்தது.
 
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு 9-ம் தேதி நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
 
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக பாராளுமன்றம் கூடியது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஆசாத் குவைசர், துணை சபாநாயகர் காசிம் சூரி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். 
 
இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தின. இதில் இம்ரான்கான் தோல்வி அடைந்தார். இம்ரான்கானுக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, பாராளுமன்ற வளாகத்தை விட்டு இம்ரான்கான் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளியேறினர்.
 
இந்நிலையில், இம்ரான்கான் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது. தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்தின் இல்லத்தை விட்டு இம்ரான்கான் வெளியேறினார்.
 

'கோட்டா கோ ஹோம்' - காலி முகத்திடல் வளாகத்தில் இன்று காலை ஆரம்பமான மக்களின் தன்னெழுச்சி போராட்டம் இரவிலும் தொடர்கின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd