web log free
May 07, 2025
kumar

kumar

ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி போன்றவற்றில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

“உள்ளே இருக்கும்போது ஐக்கிய மக்கள் சக்தியில் பல நெருக்கடியைப் பார்த்தேன். கட்சித் தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது. திசைகாட்டியிலும் நெருக்கடிகள் உள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளை அவர்கள் ஒப்புக் கொள்ளும்போது, அவர்களின் தலைவர்கள் அவற்றை முத்திரை குத்தி, அவற்றை மிகவும் பெருமையாக மக்களுக்குக் காட்டும்போது அவர்கள் மிகவும் எரிச்சலடைகிறார்கள். அதனால் தான் திசைகாட்டியும் நகர்ந்துள்ளது. வரும் ஏப்ரல் மாதத்திற்குள், இந்த நெருக்கடி தீவிரத்திற்கு வரும். இந்த அரசாங்கத்தால் சலிப்படைந்தவுடன் மக்கள் மீண்டும் ரணிலைக் கேட்பார்கள்” என்றார்.

நேற்று (13) இடம்பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 41 பேர் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான நீர்க்கட்டணங்களை இன்னும் செலுத்தவில்லை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறு அறவிடப்படாது நிலுவையில் உள்ள தொகை 9 மில்லியன் ரூபாவாகும்.

பொது விதிகளுக்கு அமைய குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சபை குறிப்பிட்டுள்ளது.

எவ்வித விசேட சலுகைகளும் இன்றி சுற்றறிக்கைகளுக்கு அமைய அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் படுகொலை, காணாமல் போன லலித் குகன் உட்பட முக்கிய ஏழு சம்பவங்கள் குறித்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த விசாரணைகளையும் தீவிரப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் சிஐடியினருடனும் உரிய பொலிஸாருடனும் இணைந்து செயற்படுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு தரப்பு பதில் பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் பிரபல வர்த்தகர் தினேஸ் ஷாப்டரின் மரணம்,வெலிகமவில் டபில்யூ 15 ஹோட்டலிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டமை குறித்தும் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் தினமும் 08 பேர் தற்கொலை செய்து கொள்வதாக இலங்கை மனநல மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்கொலை வீதம் மிக அதிகமாக இருப்பதாகவும் உலகில் 21 ஆவது இடத்தில் இருப்பதாகவும் அதன் தலைவர், விசேட வைத்திய நிபுணர் கலாநிதி சஜீவன வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக தற்கொலை வீதம் அதே மட்டத்தில் காணப்படுவதாகவும், மனச்சோர்வு, மன உளைச்சல், ஆளுமைப் பிரச்சினைகள் போன்றன இதற்குக் காரணம் எனவும் கலாநிதி வீரசிங்க வலியுறுத்துகிறார்.

2013ம் வருடம், எமது கட்சிக்கு சுமார் 50,000 வாக்குகளை தனித்து ஏணி சின்னத்தில் மாகாணசபை தேர்தலில் கொழும்பு மாவட்ட மக்கள் வழங்கினார்கள். அப்போது எமது தலைவர் மனோ கணேசனுக்கு வாக்களித்தவர்கள், குருசாமிக்கு மூன்றாம் விருப்பு வாக்காக 9,000 விருப்பு வாக்குகளைதான் வழங்கினார்கள். அப்போது, குருசாமி வெற்றி பெற்று மாகாணசபைக்கு தெரிவு செய்யப்படவில்லை. 

பின்நாளில் எமது தலைவர் பாராளுமன்றத்துக்கு தெரிவான பின் மாகாணசபையில் வெற்றிடம் ஏற்பட்டது. அப்போது கட்சியின் அரசியல் குழுவில் பிரேரணை கொண்டு வந்து தலைவர் மனோ கணேசன்தான் குருசாமியை மேல் மாகாணசபைக்கு நியமன உறுப்பினராக நியமித்தார். அதற்கு முன் ஒருமுறை தலைவரின் வழிகாட்டலில், கொழும்பு மாநகரசபைக்கும், கட்சியின் ஏனைய பல அங்கத்தவர்களுடன் குருசாமியும் ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினராக தெரிவு செய்யபட்டார். 

இரண்டு வருடங்களுக்கு முன் 2022ம் வருடம், கட்சியின் பொது செயலாளர் பதவிக்கு குருசாமியை, தலைவர் மனோ கணேசனும், தவிசாளர் ஜெயபாலனும், நிதி  செயலாளர் கணேசனும் அரசியல் குழுவில் பிரேரணை கொண்டு கூட்டாக நியமித்தார்கள். 

இவைதான் குருசாமிக்கு தலைநகர தமிழ் சமூகத்தில் கிடைக்க பெற்ற பிரதான அங்கீகாரங்கள். ஆனால் இன்று  தனக்கு இவ்வாறு சிறப்பு செய்த கட்சியையும், தலைமையையும், பாராளுமன்றம் கலைக்கபடும் வரை, இரை தேடும் நரி போல் அமைதியாக காத்திருந்து விட்டு, தேர்தல் வேளையில் திட்டமிட்டு குருசாமி அவமானபடுத்துகிறார். யார் தந்த ஒப்பந்தமோ என்று தெரியவில்லை. எப்படியும் இது மிகவும் ஒரு ஈனத்தனமான செயல். இதையிட்டு நாம் மிகவும் மனம் வருந்துகிறோம் என ஜனநாயக மக்கள் முன்னணி பொது செயலாளரும், தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு உறுப்பினருமான பரணிதரன் முருகேசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.   

கே. ரி. குருசாமி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதில் அளிக்கும் முகமாக, பொது செயலாளர் பரணிதரன் முருகேசு மேலும் கூறி உள்ளதாவது 

கடந்த ஆகஸ்ட் 2ம் திகதி, ஜனாதிபதி தேர்தல் நிலைபாட்டை தீர்மானிக்க நடைபெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டத்தில், “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலை அடிக்கிறது”  என்று குருசாமி பேசினார். பிறகு நாம் ஏக மனதாக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்த போது, அதை ஏற்று கொண்டார். சஜித் பிரேமதாசவுக்காக எமது தலைவர் ஆதரவாளர்களுடன் தெருத்தெருவாக பிரசாரம் செய்த போது, செட்டியார் தெருவுக்கு எமது தலைவருடன் வந்து குருசாமி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.  இதன் பின் இன்று, ஜேவிபிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறுகிறார். மூன்று மாதங்களுக்குள் மூன்று மாற்றங்கள்.     

தற்போது, நாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், ஜேவிபியில் சேர்ந்து தேர்தலில் போட்டி இட வேண்டும் என்ற தன் விருப்பத்தை எமக்கு கூறி விட்டு குருசாமி கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். அதை அவர் கடந்த 8ம் திகதி செட்டியார் தெரு உணவகம் ஒன்றில் நடத்திய ஒரு கலந்துரையாடலில் பகிரங்கமாகவே கூறுகிறார். அது செய்தி காணொளியாகவும் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்ல, ஜேவிபியின் வேட்பாளர் நியமன நேர்முக பரீட்சைக்கு தான் சென்றதாகவும், ஆனால், ஜேவிபி தன்னை வேட்பாளராக  தெரிவு செய்யவில்லை என்றும்கூட வெட்கமில்லாமல் கூறுகிறார். 

ஒரு கட்சியின் பொது செயலாளராக பணியாற்றிய ஒருவர், இன்னொரு கட்சியின் வேட்பாளர் நியமன நேர்முக பரீட்சைக்கு போவது என்பது எத்தகைய வெட்கம் கெட்ட செயல் என்பது இவருக்கு புரியவில்லையா? அப்படியும் வேட்பாளர் நியமனத்தை தேடி போவதற்கு கூட குருசாமிக்கு, எமது கட்சியில் அவர் வகித்த பொது செயலாளர் என்ற கெளரமான பதவிதான் காரணமாகி உள்ளது என்பதுகூட குருசாமிக்கு புரியவில்லையா?  குருசாமியின் கலந்துரையாடலில் பங்கு பற்றிய பலர் எமது தலைவரின் ஆதரவாளர்கள். அவர்கள் அந்த உரையாடலில் கலந்து கொண்ட பின் அது பற்றி எமது தலைவருடன் உரையாடியுள்ளனர். 

கடைசியில் என்ன நடந்துள்ளது? வேட்பாளராக நியமனமாகும் தகைமை குருசாமிக்கு இல்லை என அவர் தேடி போன கட்சி முடிவு செய்துள்ளது. அதாவது “அரசனை நம்பி, புருஷனை விட்டு போனவருக்கு”,  இன்று இரண்டும் இல்லை என்று ஆகி விட்டது. இதன் மூலம், தனது அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து விட்டது என குருசாமிக்கு புரியவில்லையா?   

கட்சியில்  கெளரவமும், பொறுப்பும் மிக்க பொது செயலாளர் பதவியில் இருந்த குருசாமி இரண்டு வருடங்களில் ஒருமுறை கூட தானாக முன் வந்து கட்சி அரசியல் குழு கூட்டங்களை கூட்டியதே இல்லை. கட்சியின் அரசியல் குழு உட்பட சக உறுப்பினர்களுடன், மாவட்ட அமைப்பாளர்களுடன் குருசாமி ஒருபோதும் கலந்துரையாடியதில்லை. குறிப்பாக கொழும்பு மாவட்ட வட்டார, வலய அமைப்பாளர்கள் யார் என்றே குருசாமிக்கு தெரியாது. கொழும்பு மாவட்டம் என்பது புறக்கோட்டை மட்டுமல்ல. வட கொழும்பு, மத்திய கொழும்பு, ஊறுகொடவத்தை, கொலொன்னாவை, இரத்மலானை, ராஜகிரிய, பாதுக்கை ஆகிய தொகுதிகளில் நகர வத்தைகளில் பின்தங்கிய மக்கள் வாழ்கிறார்கள். கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியான அவிசாவளையில் பெருந்தோட்டங்களில் நமது மக்கள் வாழ்கிறார்கள். பொது செயலாளர், மேல் மாகாணசபைக்கு நியமன உறுப்பினர், என்ற பதவிகளை வகித்த போது குருசாமி இந்த மக்களுடன் ஒரு போதும் உறவுகளை  பேணவில்லை. இவற்றை சவாலாக நான் குருசாமிக்கு கூறுகிறேன். முடிந்தால் மறுக்கட்டும்.  

நமது கட்சி தேர்தல் காலத்தில் உருவாகும் சுயேட்சை குழு ஒன்று அல்ல. 1940களில் இலங்கை வந்த மாகாத்மா காந்தியால் ஸ்தாபிக்கபட்ட இலங்கை-இந்திய காங்கிரசில் இருந்து உருவாகிய ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் பின்னாளில் உருவான அதன் அரசியல் பிரிவுதான், இன்றைய ஜனநாயக மக்கள் முன்னணி. இன்று எமது கட்சியும், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி ஆகிய கட்சிகளையும் கொண்டு நாம் தமிழ் முற்போக்கு கூட்டணியாக கம்பஹா, கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, நுவரேலியா, பதுளை  என்ற சுமார் 9 மாவட்டங்களில் விருட்சமாக வளர்ந்து உள்ளோம். எமது கட்சிக்கும், கூட்டணிக்கும் மனோ கணேசன் அவர்கள்தான் தலைவராக பணி செய்கிறார். இவைபற்றி எவ்வித  அக்கறையும்  கொள்ளாமல், அறியாமல், தனது குழப்பல்வாத சிந்தனை காரணமாக அனைத்தையும் அழிக்க குருசாமி முயல்கிறார்.

ஊழலற்ற அரசியலை பற்றி திடீரென குருசாமி பேசுகிறார்.  நாமும் அதையே எதிர்பார்க்கிறோம். அதை ஜேவிபி அரசு செய்யுமானால் நாம் ஆதரிப்போம். இந்த ஊழல், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை அநேகமான பெரும்பான்மை இன அரசியல்வாதிகளை நோக்கி சிங்கள மக்கள் இன்று கூறுகிறார்கள். தமிழ் அரசியல்வாதிகளில் அப்படி ஒரு சிலர் இருந்தால் அவர்களை மக்கள் கட்டாயமாக தெரிவு செய்ய கூடாது. ஆனால், அதை கூறி இங்கே எல்லோரையும் ஒரே கூடையில் போட குருசாமி மறைமுகமாக முயல்கிறார். குருசாமி யார் என எங்களுக்கு அவர் மாளிகாவத்தையில் வாழ்ந்த காலம் முதல் தெரியும். தலைவர் மனோ கணேசன் யார் என குருசாமிக்கும் தெரியும். அமைச்சரவை அமைச்சராக இருந்த போது, தனக்கு கொழும்பு கறுவாதோட்ட பகுதியில் ஒதுக்க பட்ட  சொகுசு பங்களாவையே வேண்டாம் என்று ஒதுக்கியவர், எமது தலைவர். அவரது நேர்மை எப்போதும் எரியும் நெருப்பு. 

ஜேவிபி அரசாங்கத்துடனான நல்லுறவை நாம் பார்த்து கொள்கிறோம். அதற்கு குருசாமி என்ற தரகர் எமக்கு தேவையில்லை. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எமது தலைவரின் நீண்ட கால நண்பர். பிரதமர் ஹரினியும் அப்படியே. அதை தலைவர் மனோ கணேசன் பகிரங்கமாக கூறியும் உள்ளார். அதற்காக நாம் கட்சியை கலைத்து விட்டு,  ஓடோடி சென்று ஜேவிபியில் இணைய வில்லை. “எமது வாக்கு-எமது பலம். நாம் வெல்வோம்-எடுத்து சொல்வோம்” என்ற எமது தேர்தல் சுலோகத்தின்படி எமது மக்களின் பிரதிநிதிகளாக நாம் பாராளுமன்றம் சென்று அங்கே அரசாங்கத்துக்கு, கொழும்பு முதல் நுவரேலியா வரை வாழும் எமது மக்களின் தேவைகளை எடுத்து கூறி,  அரசுக்கு அவசியமான ஒத்துழைப்புகளை வழங்கி செயற்படுவோம். அதுதான் கெளரவமான அரசியல் நடைமுறை என்பதை இன்று அரசியல் பிழைத்து போன குருசாமி உணரவேண்டும்.

நாட்டின் பல பகுதிகளில் லாப் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

காஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதிகள், கோரிக்கை விடுத்தும், நிறுவனம் தேவையான அளவு எரிவாயு இருப்புக்களை வழங்கவில்லை என்று கூறுகின்றனர்.

மலிவு விலை எரிவாயு நிறுவனம் கடந்த சில நாட்களாக சந்தைக்கு போதிய அளவு இருப்பை வெளியிடவில்லை என்பதும் தெரிந்ததே.

உலகில் அதிகரித்துள்ள எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த நாட்டில் எரிவாயு விலை உயர்த்தப்படாததே இதற்குக் காரணம்.

உலக சந்தையில் காஸ் விலை அதிகரித்துள்ள போதிலும், உள்ளூர் சந்தையில் எரிவாயு விலையை உயர்த்தப்போவதில்லை என லிட்ரோ கேஸ் நிறுவனம் கடந்த விலை திருத்தத்தில் அறிவித்தது.

இந்த சூழ்நிலை காரணமாக, லாஃப் வழங்கல் தடைபட்டதால், தேவை இயல்பாகவே லிட்ரோவுக்கு மாறியுள்ளது.

நாட்டின் எரிவாயு தேவையில் 23% லாஃப் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் வெப்பம் மற்றும் குளிர்காலத்தில் தேவை அதிகரிப்பு காரணமாக உலக சந்தையில் எரிவாயுவின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் அளித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக 349 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

அத்துடன், 147 அரசியல் கட்சிகளும் 94 சுயேச்சைக் குழுக்களும் நேற்றைய தினம் வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் பிரகாரம், பொதுத் தேர்தல் தொடர்பில் ஒவ்வொரு வேட்பாளரும் செலவிட வேண்டிய பணத்தின் அளவு எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்ட செயலகங்களிலும், இராஜகிரியிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தைச் சுற்றியும் வேட்புமனு கையளிக்கும் காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதேவேளை, மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் ஊடாக பொதுத் தேர்தலை ஒருங்கிணைக்க பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தமிழரசு கட்சிக்கு வழங்கிய ஆணையை மீறி செயல்பட்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் தமிழரசு கட்சியால் தமிழ் மக்களுக்கு எவ்வித பிரயோசனமும் கிடைக்கப் போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியை மற்றும் சுமந்திரன் செயல்பாடு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதில் வழங்கினார்.

தேர்தல் காலங்களில் தமிழரசு கட்சி சமஸ்டி, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை, ஒற்றை ஆட்சியை எதிர்க்கிறோம் என்ற கோரிக்கைகளை தமிழ் மக்கள் முன்வைத்து வாக்குகளை பெறுகிறார்கள்.

தேர்தலில் வென்ற பின்னர் தமிழ் மக்களுக்கு வழங்கிய ஆணைகளை மறந்து தமது இருப்புக்களையும் சுயலாப அரசியலையும் மேற்கொள்வதற்கான செயற்பாடுகளில் தமிழரசு கட்சியை ஈடுபட்டு வருகிறது.

அண்மையில் தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், ஜனாதிபதி அனுரவை சந்தித்து மதுபான அனுமதி பத்திரங்களை பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு கோருகிறார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரவை முதன் முதலில் சந்திக்க சென்ற சுமந்திரன், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் அனுரவுடன் பேசாமல் மதுபான அனுமதிப்பத்திர பெயர்களை வெளியிடுமாறு கேட்கிறார்.

பெயர் பட்டியல் வெளியிடுவதை வேண்டாம் என நாங்கள் கூறவில்லை சுமந்திரன் தமிழரசு கட்சிக்குள் தனக்கு வேண்டாதவர்களை அப்புறப்படுத்துவதற்கும் தனது இருப்பை தக்க வைப்பதற்கும் மதுபான அனுமதி பத்திரங்களை வெளியிடுமாறு கேட்பதாக நான் கருதுகிறேன்.

ஏனெனில் தமிழ் மக்களுக்கு வரலாற்று துரோகங்களை செய்த ஜே.வி.பி தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு அனுர ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

மஹிந்த ராஜபக்ச காலத்தில் தமிழ் மக்களின் இனப் படுகொலைக்கு அரசியல் நீதியாக ஆதரவு வழங்கிய கட்சிகளில் பிரதானமான கட்சியாக ஜே.வி.பி விளங்கியது.

சமாதான ஒப்பந்த காலத்தில் வடக்கு கிழக்கு இணைப்பை நீதிமன்றம் சென்று பிரித்தவர்களும் ஜே.வி.பியினர் தான்.

அதுமட்டுமல்லாது அரசியல் அமைப்புத் தான் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு இராணுவத்தை தண்டிக்க விடமாட்டேன் என கூறும் ஜனாதிபதியாக அனுர காணப்படுகிறார்

இவ்வாறு தமிழ் மக்களுக்கு துரோகங்களை இழைத்த கட்சியைச் சார்ந்தவரிடம் தமிழரசு கட்சி சுமந்திரன் சந்திக்க சென்ற போது தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பேசி இருக்க வேண்டும் அதுவே வாக்களித்த மக்களுக்கு தமிழரசு கட்சி செய்ய வேண்டிய கடமை அதை சுமந்திரன் செய்யவில்லை.

அது மட்டும் அல்ல. தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் ஜனாதிபதி அனுரவை சந்தித்தமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பொது வழியில் பேசப்படுவருகிறது.

ஆகவே தமிழரசு கட்சியும் சுமந்திரனும் தமிழ் மக்களுக்கு வழங்கிய ஆணையிலிருந்து விலகி தமது சொந்த சுயநல அரசியலுக்காக செயற்பாட்டுவரும் நிலையில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் பிரயோசனப்பட மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் திருடர்கள் சட்டரீதியாக பிடிபடுவதாகவும் அரசியல் பழிவாங்கல் இல்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

திருடர்களைப் பிடிக்கத் தொடங்கும் போது அழவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறார்.

அரசாங்கம் பதவியேற்று இரண்டு வாரங்கள் ஆவதால், அந்த நேரத்தில் எல்லாவற்றையும் எதிர்பார்க்கக் கூடாது என்கிறார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், தேர்தலில் போட்டியிடவோ, ஆட்சிப் பொறுப்பில் அமர்வதற்கோ தேவை இல்லை என்றும், கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை தாம் நிறைவேற்றுவதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர்களினால் 14 உத்தியோகபூர்வ வீடுகளே கையளிக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 41 குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த உடனேயே இந்த வீடுகளை மீள வழங்குமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்தல் விடுத்திருந்தது.

தொடர்ந்தும் குறித்த குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd