அரசு விதித்துள்ள கூடுதல் வரி சதவீதத்தை எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் நீக்க தீர்மானித்தால், இலங்கை சந்தையில் வாகன விலைகள் குறையக்கூடும் என இலங்கை மோட்டார் வாகன விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அச்சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே கூறுகையில், ஆகஸ்ட் 15க்கு பின்னரும் அந்த கூடுதல் வரி தொடர்ந்தால், வாகன விலைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றார்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சந்தையில் அதிகளவான தேவை ஏற்பட்டிருந்தாலும், தற்போது அந்த தேவை இயல்பான நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போதைய வாகன இறக்குமதி தரவுகளை கடந்த ஆண்டின் தரவுகளுடன் ஒப்பிடுவது பொருத்தமல்ல என்றும், சரியான ஒப்பீட்டிற்காக வாகன இறக்குமதி வழக்கம்போல் நடைபெற்ற 2019ஆம் ஆண்டின் தரவுகளையே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், சுங்கத் துறை அறிக்கைகளின்படி, முன்பு ஒரு நாளைக்கு வாகனங்களை விடுவிப்பதற்காக 800 முதல் 850 வரையிலான சுங்கப் பிரகடனங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 300 முதல் 350 ஆக கணிசமாகக் குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 1.07 பில்லியன் அமெரிக்க டொலர் (1,070 மில்லியன் டொலர்) பெறுமதியான வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
மேலும், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அமுல்படுத்தப்பட்ட வரி திருத்தங்களால், வாகன இறக்குமதி செலவு சுமார் 20% அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இம்மாதத்தில் சுமார் 180 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் என அரசு எதிர்பார்க்கிறது.
அத்துடன், 2019ஆம் ஆண்டில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் பெறுமதி 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் (1,400 மில்லியன் டொலர்) என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.



