– விமல் வீரவன்ச குற்றச்சாட்டு
தற்போதைய அரசு நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன் காரணமாக, நீதித்துறையை சுதந்திரமாக மீட்டெடுப்பது அனைத்து அரசியல் கருத்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சக்திகளின் பொதுவான தேவையாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறினார்.
முன்னாள் அரசாங்கம், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தொடர்பான விவகாரத்தில் நடந்துகொண்ட விதம் “மோசமானது” எனக் கருதப்பட்டால், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் நடவடிக்கை அதைவிடவும் பொருத்தமற்றதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சியில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒன்றிணைய வேண்டிய சூழலை உருவாக்கியது தற்போதைய அரசே எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டார்.



