– 2025ல் ஜனாதிபதி தங்கவில்லை; ஆனால் 3,089 பேர் தங்கியுள்ளனர் – தேசிய கணக்காய்வு அலுவலகம்
2025 ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள ஜனாதிபதி மாளிகைகளில் ஜனாதிபதி எங்கும் தங்காத போதிலும், அவற்றில் பலவற்றில் மொத்தம் 3,089 பேர் தங்கியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, குறித்த காலப்பகுதியில் ஜனாதிபதி மாளிகைகளில் மூன்று கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன.
நாட்டிலுள்ள ஏழு ஜனாதிபதி மாளிகைகளின் மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட ஏனைய வசதிகளுக்காக 2025 ஆம் ஆண்டில் ரூ. 32,982,675 செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கதிர்காமம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்டை ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளில் 2025 ஆம் ஆண்டு முழுவதும் எந்தக் கூட்டமும் நடத்தப்படாததுடன், யாரும் தங்கியிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த மூன்று மாளிகைகளுக்கே மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட பிற செலவுகளுக்காக ரூ. 2,447,754 செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஏழு ஜனாதிபதி மாளிகைகள் கொழும்பு கோட்டை, கண்டி, அனுராதபுரம், கதிர்காமம், மஹியங்கனை, நுவரெலியா மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன.



