நாட்டில் தற்போது நிலவி வரும் எல் நினோ காலநிலை காரணமாக இருந்தாலும், நாட்டின் எந்தப் பகுதிக்கும் இதுவரை குடிநீர் விநியோகத்தை கட்டுப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் சந்தன பண்டார தெரிவிக்கையில், குடிநீர் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் பிரதான நீர்த்தேக்கங்களின் நீரைப் பெறுவதில் இதுவரை நீர்ப்பாசனத் திணைக்களமோ அல்லது மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையோ எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்காததால், சபை தனது அதிகபட்ச நீர் உற்பத்தித் திறனை தொடர்ந்து பேணிவருவதாகக் கூறினார்.
எனினும், எதிர்காலத்தில் நீர்மட்டம் மிகவும் குறைந்து, நீர்ப்பாசனத் திணைக்களமோ அல்லது மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையோ நீர் பயன்பாட்டில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அப்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு குடிநீர் விநியோகத்தை மட்டுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பின்படி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் தற்போது வறண்ட காலநிலை நிலவத் தொடங்கியுள்ளது.
அந்த முன்னறிவிப்புகளின்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் மீண்டும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டாலும், 2027ஆம் ஆண்டு ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த வறட்சி நிலை மேலும் தீவிரமடையக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த காலநிலைச் சவாலை சமாளிப்பதற்காக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தற்போது விசேட முன்தயாரிப்புகளில் ஈடுபட்டு வருவதாகவும், நிலத்தடி நீரை அதிகளவில் பெற்றுக்கொள்ள தற்போதுள்ள குழாய் கிணறு (Tube Well) அமைப்புகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சவாலான காலத்தை கடந்து செல்லும் வரை, குடிநீரை வீணாக்காமல் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறும், மிகுந்த சிக்கனத்துடன் நீரைப் பயன்படுத்துமாறும் சந்தன பண்டார பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.




