உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் புதிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (01) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் எந்தவொரு சூத்திரதாரியும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கைது நடவடிக்கைகள் தொடரும் என்றும், இன்னும் பலர் சட்டத்தின் முன் நிறுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாரபட்சமின்றி அனைத்து தரப்பினருக்கும் எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், கடமையைச் செய்யத் தவறியமை, சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அரச அதிகாரிகள், இராணுவ மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள், அரசியல் அதிகாரத்தில் இருந்த அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன, சுரேஷ் சலே, தேசபந்து தென்னகோன் மற்றும் அசாத் மௌலானா உள்ளிட்ட எவரும் இந்த வழக்கில் பொறுப்பிலிருந்து தப்ப முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச, இந்த தாக்குதலின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவராகக் கூறப்படும் சுரேஷ் சலேவை அரச புலனாய்வுப் பிரிவின் தலைவராக நியமித்து, அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதன் மூலம் ஆதாரங்களை மறைப்பதற்கும், ஷானி அபேசேகர போன்ற நேர்மையான புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கடந்த வாரம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சதித்திட்டத்திற்கு துணைபோன அல்லது கடமையைச் செய்யத் தவறிய அரச அதிகாரிகள் எதிர்கொள்ளக்கூடிய கடுமையான தண்டனையை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாகவும், அந்தத் தீர்ப்பை தாங்கள் மதிப்பதாகவும் சமீர பெரேரா குறிப்பிட்டார்.
எதிர்வரும் காலங்களில் இந்த தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் இராணுவ மற்றும் அரசியல் தரப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், தற்போதைய அரசாங்கம் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படுபவர்களுக்கு எதிராக எந்தவித பாரபட்சமும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, புலனாய்வு தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்தபோதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அண்மையில் மரண தண்டனை விதித்துள்ளமை இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதற்கான முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.




