2026 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, அனைத்து வகையான மேலதிக பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் பட்டறைகளை நடத்துவதற்கு இன்று (05) நள்ளிரவு முதல் முழுமையான தடை அமுல்படுத்தப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தத் தடை, புலமைப்பரிசில் பரீட்சை நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடையும் வரை தொடரும் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சையின் நம்பகத்தன்மையையும் சம வாய்ப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனுடன், பரீட்சை தொடர்பான மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல், விற்பனை செய்தல் அல்லது எந்த வடிவிலும் பரப்புரை செய்தல் என்பனவும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
மேலும், பரீட்சை வினாத்தாளில் இடம்பெறக்கூடிய வினாக்கள் அல்லது அதற்கு ஒத்த வினாக்கள் வழங்கப்படும் எனக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுதல், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்துதல் அல்லது அவ்வாறான பொருட்களை வைத்திருப்பதும் சட்டவிரோதமாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 09 ஆம் திகதி நாடு முழுவதும் அமைந்துள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு, புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடைபெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். நிலவும் மழை நிலைமை, இயற்கை அனர்த்த அபாயங்கள் மற்றும் பரீட்சை நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.




