– மீன்வள பிரதி அமைச்சர்
எல் நினோ நிலைமையின் காரணமாக கடல் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை அதிகரித்துள்ளதால், இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் காணப்படும் மீன் வளம் ஆழ்கடலை நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக மீன் பிடிப்பு குறைந்துள்ளதாக மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
தற்போதைய சந்தையில் மீன்களின் விலை அதிகரிப்பதற்கு இந்த சுற்றுச்சூழல் மாற்றங்கள் நேரடியாக தாக்கம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் உருவாகியுள்ள இந்தப் பிரச்சினைகளுக்கு விஞ்ஞான ரீதியான தீர்வுகளைத் தேடும் நோக்கில், தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட ஆய்வாளர்களை அழைத்து விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்போது சுற்றுச்சூழல், மனித மற்றும் பொருளாதார சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்ந்து, மூன்று மாதங்களுக்குள் விஞ்ஞான ரீதியான ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.
அந்த ஆய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு நிலையான தீர்வொன்றை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், தற்போதைய நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான மீனவர்களுக்கு குறுகிய கால நிவாரணமாக மாதம் 31,250 ரூபாய் வீதம் மூன்று மாதங்களுக்கு மொத்தமாக 93,750 ரூபாய் நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன், பல நாள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஒருமுறை 100,000 ரூபாய் நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தகுதியுடைய மீனவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இதுவரை குறித்த நிவாரணத் தொகை வழங்கி முடிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே மேலும் உறுதிப்படுத்தினார்.




