பயணச் செலவு கொடுப்பனவை அதிகரிக்காமை உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து, கிராம உத்தியோகத்தர்கள் இன்று (10) மற்றும் நாளை (11) ஆகிய இரு தினங்களிலும் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிக்காமல் இருக்க தீர்மானித்துள்ளனர்.
கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, சங்கத்தின் பொதுச் செயலாளர் டபிள்யூ. ஏ. பி. ஏ. விஜேரத்ன, அநீதிகளுக்குத் தீர்வு காண்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.
தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு அரசியல் அதிகாரிகளிடமும் நிர்வாகத் தலைவர்களிடமும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த போதிலும், இதுவரை எந்தவொரு தீர்வும் வழங்கப்படவில்லை எனவும், இதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள ஒருமனதாக தீர்மானித்ததாகவும் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.




