தற்போதைய அரசாங்கத்தின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அல்லது முறைகேடாக பணம் சம்பாதித்த எந்தவொரு நபரும் இல்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அவ்வாறான ஒருவர் இருந்தால், அது தொடர்பில் வெளிப்படுத்துமாறு அவர் பொதுமக்களுக்கு சவால் விடுத்துள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய அமைச்சர், தமது குழுவினரின் நேர்மை மற்றும் தூய்மை தொடர்பில் தமக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
“இந்த 159 பேரில் ஒருவராவது இருந்தால் கூறுங்கள். யாராவது ஊழல் குற்றச்சாட்டு, குற்றச் செயல் அல்லது தாங்களாகவே பணம் சம்பாதித்து வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா என்பதை தெரிவியுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கையை முழுமையாக நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும், தமது அடையாளத்தையும் கடமையையும் எந்த வகையிலும் காட்டிக்கொடுக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
தூய்மையான அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




