– உயிர்காக்கும் 13 மருந்துகளுக்கும் தட்டுப்பாடு இல்லை
இலங்கையில் பயன்படுத்தப்படும் 618 அத்தியாவசிய மருந்து வகைகளில் 33 வகைகளுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவி வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எனினும், உயிர்காக்கும் மருந்துகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள 13 வகையான மருந்துகளுக்கும் எந்தவித தட்டுப்பாடும் இல்லை என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மருத்துவமனைகளில் நாளாந்த சிகிச்சை நடவடிக்கைகள் எவ்வித தடையும் இன்றி தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, 886 வகையான மருந்துகளை உள்ளடக்கிய விசேட முன்னுரிமைப் பட்டியலை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய மருந்துகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள 618 மருந்து வகைகளில் 585 வகைகள் தற்போது மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களிடம் கையிருப்பில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தட்டுப்பாடு நிலவும் ஏனைய மருந்துகளின் தாக்கத்தை குறைப்பதற்காக, உள்நாட்டில் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நிலவும் மருந்து தட்டுப்பாட்டை விரைவாக தீர்ப்பதற்கு அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




