தற்போது பழைய வழக்குகளின் விசாரணைகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கி வருவதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்குகள் மேலும் பழமையானதாக மாறுவதற்கு இடமளிக்க முடியாத காரணத்தினாலேயே அவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் மேல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய காலத்திலும் முதலில் பழைய வழக்குகளுக்கே முன்னுரிமை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை மாத்திரம் விசாரணை செய்து, பழைய வழக்குகளை புறக்கணிக்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் புதிய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்படும் என ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளை பழிவாங்கும் நோக்கில் பழைய சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.




