– அமைச்சர் வசந்த சமரசிங்க
இந்நாட்டில் அடுத்ததாக உருவாகும் அரசாங்கமும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமாகவே இருக்கும் எனவும், அதன் ஜனாதிபதியாகவும் அனுர குமார திசாநாயக்கவே இருப்பார் எனவும் நாட்டின் மக்கள் ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டதாக வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தமது தரப்பு தயாராக இருப்பதாக தெரிவித்த அமைச்சர், மக்கள் தீர்மானிக்கும் எந்தவொரு அரசியல் குழுவுடனும் ஜனநாயக தேர்தல் முறையின் கீழ் போட்டியிட தேசிய மக்கள் சக்திக்கு எவ்வித அச்சமும் இல்லை எனவும் கூறினார்.
பொதுச் சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள், திருட்டு மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவோம் என மக்களிடம் வழங்கிய வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவோம் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
அதற்குத் தேவையான சட்டத்தின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஏற்கனவே மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் நாட்டை அழிவுக்குக் கொண்டு சென்ற திருடர்களிடம் மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க இலங்கை மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜனநாயக கட்டமைப்பிற்குள் திருட்டு மற்றும் மோசடிகளில் ஈடுபடாத, அரசியலை கௌரவமான சேவையாகக் கருதும் எவரும் சுயாதீனமாகவோ அல்லது அரசியல் கட்சிகளின் ஊடாகவோ எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட முடியும் எனவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், அவ்வாறு போட்டியிடும் எந்தவொரு தரப்பினரும் தேசிய மக்கள் சக்திக்கு சவாலாகவோ போட்டியாகவோ இருக்கமாட்டார்கள் என அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்தார்.




