நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்டிருந்த 6 வருட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை மீண்டும் அமுல்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஞானசார தேரர்,
“கடந்த 25 வருடங்களாக இந்த நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் என்னை தியாகம் செய்துள்ளேன். தற்போது நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன்…”
எனத் தெரிவித்துள்ளார்.
தன்னை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த விதம் மற்றும் சிறைத்தண்டனையின் எஞ்சிய காலம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டமை தொடர்பில் அவர் அதிருப்தி வெளியிட்டதுடன், தான் நாட்டுக்காகவே பணியாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதி பொது மன்னிப்பு செல்லுபடியற்றது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அவரது சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.




