நாடுகளுக்கு இடையிலான எரிபொருள் விலைகளை ஒப்பிடும்போது, அந்தந்த நாடுகளின் மக்களின் தனிநபர் வருமானம் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதியும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
உலகச் சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளையும் இலங்கையின் எரிபொருள் விலைகளையும் ஒப்பிட்டு அமைச்சர் சமந்த வித்யாரத்ன வெளியிட்ட கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சரத் பொன்சேகா,
“அண்மையில் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் டீசல் மற்றும் பெற்றோல் விலைப் பட்டியலை வாசித்துக் கொண்டிருந்தார். இலங்கையில் டீசல் விலை 495 ரூபாய் எனக் குறிப்பிட்டுவிட்டு, அமெரிக்காவில் 500 ரூபாய் என்றும், சிங்கப்பூரில் 550 ரூபாய் என்றும் தெரிவித்தார். இதனைப் பார்க்கும்போது இலங்கையில்தான் எரிபொருள் விலை குறைவாக இருப்பதாகத் தோன்றும்.
ஆனால், 10,000 டொலர் சம்பளம் பெறும் ஒருவர் 650 ரூபாய்க்கு ஒரு லீற்றர் டீசலை வாங்குவதற்கும், 35,000 ரூபாய் சம்பளம் பெறும் ஒருவர் 550 ரூபாய்க்கு ஒரு லீற்றர் டீசலை வாங்குவதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த அடிப்படை விடயத்தைப் புரிந்துகொள்ளாமல் எரிபொருள் விலைகளை ஒப்பிடுவது பொருத்தமானதல்ல. இவ்வாறான ஒப்பீடுகள் மூலம் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை யார் மேற்கொண்டாலும் அதனை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.




