– அமைச்சர் விஜித ஹேரத்
வடக்கு மாகாணத்தில் முன்னர் அமைக்கப்பட்டிருந்த அனைத்து இராணுவ வீதித் தடைகளும் தற்போது முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாகவும், வடக்கு மக்களின் அன்றாடப் போக்குவரத்து நடவடிக்கைகள் எவ்வித தடையுமின்றி சுதந்திரமாக இடம்பெறுவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் பலாலி உள்ளிட்ட வடக்கின் பல வீதிகளில் பாதுகாப்புத் தடைகள் அமைக்கப்பட்டிருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். எனினும், தற்போது அந்தத் தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளதுடன், சாதாரண பேருந்து சேவைகள் உள்ளிட்ட போக்குவரத்து நடவடிக்கைகளும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தைப் போலவே கிழக்கு மாகாணத்திலும் அமைக்கப்பட்டிருந்த பெருமளவிலான இராணுவ வீதித் தடைகள் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், வடக்கில் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். காணி உரிமையாளர்கள் வெளிநாடுகளில் வசிப்பது, உயிரிழந்துள்ளமை அல்லது வேறு தரப்பினர் உரிமை கோருவது போன்ற காரணங்களால் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விசேட காணிக் கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் குறித்த காணிகளின் உரிமையை முறையாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
இதேவேளை, செம்மணி உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பான அகழ்வுப் பணிகளும் நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த விசாரணைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை அல்லது தொடர்புடைய சர்வதேச நிறுவனங்களிடமிருந்து விஞ்ஞான நிபுணத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நிறைவடைந்ததும், அதனுடன் தொடர்புடைய டி.என்.ஏ. பரிசோதனைகள் மற்றும் காபன் காலக்கணிப்பு பரிசோதனைகளைத் துல்லியமாக மேற்கொள்வதற்குத் தேவையான சர்வதேச நிபுணத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.




