தரமற்ற நிலக்கரியை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை மற்றும் அவசர கொள்வனவுகள் காரணமாக நாட்டுக்கு 17,965 மில்லியன் ரூபாய்க்கும் (1,796.5 கோடி ரூபாய்) அதிகமான பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தின் உட்கட்டமைப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
நேற்று (08) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இந்த இழப்பானது மத்திய வங்கி பிணைமுறி மோசடியால் ஏற்பட்டதாகக் கூறப்படும் இழப்பின் ஒன்றரை மடங்குக்கும் அதிகமானது எனக் குறிப்பிட்டார்.
துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில், தரமற்ற நிலக்கரி காரணமாக லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட செலவுகள் பின்வருமாறு:
300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மேலதிக நிலக்கரியைப் பயன்படுத்தியதால் 799 மில்லியன் ரூபாய் இழப்பு.
பராமரிப்புப் பணிகளுக்காக 80.4 மில்லியன் ரூபாய் செலவு.
சாம்பலைக் கட்டுப்படுத்துவதற்காக 13.1 மில்லியன் ரூபாய் செலவு.
மின்சார உற்பத்தி குறைவடைந்ததால் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தைப் பேணுவதற்காகத் தனியார் துறையிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய 8,573 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வருகை தர வேண்டிய 25 நிலக்கரிக் கப்பல்களில் 19 கப்பல்கள் மட்டுமே வந்துள்ளன. இதனால் அவசர கொள்வனவின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து கப்பல்களுக்காக மேலதிகமாக 2,284 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தரமற்ற நிலக்கரி இறக்குமதியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்தச் சம்பவமே நாட்டில் மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிப்பதற்கு நேரடிக் காரணமாக அமைந்துள்ளதாகவும், இதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்வதற்காக அரசாங்கம் மக்கள் மீது வரிச்சுமையைச் சுமத்தியுள்ளதாகவும் மரிக்கார் குற்றஞ்சாட்டினார்.
இந்தப் பாரிய நிதி இழப்புக்குத் அப்போதைய அமைச்சராகப் பதவி வகித்த குமார ஜயக்கொடி நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் மேலும் குறிப்பிட்டார்.




