கடந்த ஆட்சிக் காலங்களில் எத்தியோப்பியாவைவிடவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருந்த இலங்கை, தற்போதைய அரசாங்கத்தின் சரியான நடவடிக்கைகள் மூலம் மீண்டும் சாதகமான நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதற்குப் பொறுப்பானவர்களாக முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் பெயர்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்ததாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.
கடந்த பொருளாதார நெருக்கடியின்போது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு பூஜ்ஜிய நிலைக்குச் சென்றதுடன், பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்ததாகவும், பணம் அச்சிடப்பட்டதன் காரணமாக இலங்கை ரூபாயின் பெறுமதி கடுமையாகச் சரிவடைந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
அந்தக் காலகட்டத்தில், இந்தியாவின் வர்த்தக நிலையங்களில்கூட இலங்கை மக்களுக்கு உதவி சேகரிக்கும் வகையில் உண்டியல்கள் வைக்கப்படும் அளவுக்கு நாடு பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, நாடு தற்போது சாதகமான பொருளாதாரப் பாதையில் பயணிப்பதாகப் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
இதற்கமைய, நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிக் கையிருப்பு 7 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், வாகன இறக்குமதிக்காக மாத்திரம் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எதிர்மறையாக இருந்த பொருளாதார வளர்ச்சி வீதத்தை 5 சதவீதத்திற்கும் அதிகமான நேர்மறை வளர்ச்சியாக மாற்ற முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், உலக மகிழ்ச்சிக் குறியீட்டில் 14 நாடுகளையும், உலகளாவிய அமைதிக் குறியீட்டில் 20 நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை மீண்டும் நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற நிலையை நோக்கி முன்னேறி வருவதை உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை இன்னமும் உயர் வருமானம் பெறும் நாடாக மாறவில்லை என்றாலும், நாடு வீழ்ச்சியடைந்திருந்த பாரிய பொருளாதாரப் படுகுழியிலிருந்து மீட்கப்பட்டு, சரியான திசையில் வழிநடத்தப்படுவதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மேலும் குறிப்பிட்டார்.




