– ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
பிரதேச சபைத் தலைவர் பதவி முதல் ஜனாதிபதியின் மனைவி மற்றும் மகன் என்ற அந்தஸ்து வரை, திருடுவதற்கான உரிமமாகப் பயன்படுத்தப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்தஸ்து, பதவி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மோசடியில் ஈடுபடுவோருக்குத் தண்டனை வழங்குவதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக முன்னெடுத்துள்ளதாகவும், தொடர்ந்து அதனைச் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (11) இப்பாகமுவ, கோகரெல்ல விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
“எமது நாட்டில் பிரதேச சபைத் தலைவர் பதவி என்பது திருடுவதற்கான உரிமம் என்று கருதப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்பது திருடுவதற்கான உரிமம் என்றும், அமைச்சர் பதவி என்பது திருடுவதற்கான உரிமம் என்றும் கருதப்பட்டது.
ஜனாதிபதி பதவி என்பது திருடுவதற்கான உரிமம் என்றும், ஜனாதிபதியின் மனைவி என்பது திருடுவதற்கான உரிமம் என்றும், ஜனாதிபதியின் மகன் என்பது திருடுவதற்கான உரிமம் என்றும் கருதப்பட்டது.
இதனால், எமது நாட்டில் உரிமம் பெற்ற திருடர்களும் இருந்தார்கள்; அப்பாவித் திருடர்களும் இருந்தார்கள். உரிமம் பெற்ற திருடர்களுக்கு எதிராகச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தேங்காய் ஒன்றைத் திருடியவர்கள் அல்லது அடுத்தவரின் தோட்டத்தில் இருந்து வாழைக்குலையை வெட்டியவர்கள் மீதே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நினைவிருக்கிறதா?
சிறிய அளவில் திருடியவர்களுக்கு எதிராகவே சட்டம் செயற்பட்டது. இதனால், சட்டம் தொடர்பாகவும் திருடர்கள் தொடர்பாகவும் பிரபலமான ஒரு கூற்று இருந்தது. சட்டம் என்பது சிலந்தி வலை போன்றது. சிறிய பூச்சிகள் அதில் சிக்கிக்கொள்ளும்; பெரியவை அதைக் கிழித்துக்கொண்டு வெளியேறிவிடும்.
சிலர் திருடியிருந்தாலும், சட்டம் தங்களை நெருங்க முடியாத அளவுக்கு அதிகாரம் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் இருந்தது. அந்த ஒளிவட்டத்தின் முன்னால் சட்டமே சாம்பலாகிவிடும். சட்டம் அவர்களை நெருங்கும்போதே எரிந்துவிடும். அந்த அளவுக்கு அவர்கள் அதிகாரம் மிக்கவர்களாக இருந்தார்கள்.
ஆனால், அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் மோசடியில் ஈடுபடுவோருக்குத் தண்டனை வழங்குவது தொடர்பாக எமது அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்திருந்தால், அந்தப் பொறுப்பை நாம் உறுதியாக நிறைவேற்றியுள்ளோம். தொடர்ந்து நிறைவேற்றியும் வருகின்றோம்” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.




