– முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டுள்ள ஆறு ஆண்டு சிறைத்தண்டனை சட்டவிரோதமானது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.
சட்டத்தால் விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனையை மீறி இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் திங்கட்கிழமை (12) அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை முற்றிலும் சட்டவிரோதமானது. இது ஒரு அசாதாரணமான நிலைமை” என அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த சரத் என். சில்வா, சம்பந்தப்பட்ட நீதவான் தனது நீதிமன்றத்தில் இத்தகைய சம்பவம் இடம்பெற்றதாகவும், தமக்கு தண்டனை விதிக்கும் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளதால் அதைவிடக் கடுமையான தண்டனை வழங்குவதற்காக இந்த விவகாரத்தை மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அனுப்புவதாகவும் குறிப்பிட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவுக்கு கடிதம் அனுப்பியிருந்ததாகத் தெரிவித்தார்.
தண்டனை தொடர்பில் சட்டச் சர்ச்சை
“பிரச்சினை இருப்பது இங்குதான். நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்கு 1,500 ரூபாயைத் தாண்டாத அபராதம் அல்லது 18 மாதங்களுக்கு மேற்படாத எளிய சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதாவது, அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை வழங்க முடியும்.
“ஆனால், சட்டத்தில் அதிகபட்சமாக 18 மாத சிறைத்தண்டனை குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன ஆறு ஆண்டு சிறைத்தண்டனையை விதித்துள்ளார். அந்தச் சட்ட ஏற்பாடு மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றத்துக்கு மட்டுமே பொருந்தும். ஏனைய விடயங்களுக்கு இத்தகைய ஏற்பாடு இல்லை” என சரத் என். சில்வா குற்றஞ்சாட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஞானசார தேரருக்கு முன்னதாக வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பையும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா இதற்கு முன்னர் நியாயப்படுத்தியிருந்தார்.
பௌத்த மதத்தையும் சிங்கள பௌத்த மரபுரிமையையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற இந்த தேசிய மாநாட்டில் பௌத்த பிக்குகள், அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.




