– பேராசிரியர் ஞானிஸ்ஸர தேரர் குற்றச்சாட்டு
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவியுடையை அகற்ற முயற்சித்ததன் பின்னணியில், சிறைச்சாலைக்குள் செயற்கையான மோதலை உருவாக்கி அவரைக் கொலை செய்வதற்கான இரகசியத் திட்டம் இருந்ததாக இலங்கை பௌத்த மற்றும் பாளி ஆய்வுகள் துறையின் பேராசிரியர் பாதேகம ஞானிஸ்ஸர தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக இந்தப் பாரதூரமான சதித்திட்டம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைக்குள் மோதல் ஒன்றை உருவாக்கி, ஞானசார தேரர் கைத்துப்பாக்கியொன்றைக் கைப்பற்றி தமக்குத்தாமே சுட்டுக்கொண்டதாகத் தோற்றமளிக்கும் போலியான கதையொன்றைப் பரப்புவதே அரசாங்கத் தரப்பினரின் நோக்கமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னரும் பல பௌத்த பிக்குகள் கடுமையான சிறைத்தண்டனைகளை அனுபவித்துள்ள போதிலும், எந்தவொரு ஆட்சியாளரும் அவர்களின் காவியுடையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பேராசிரியர் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். ஞானசார தேரர் முன்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலும் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
வரலாற்றில் சிறையில் அடைக்கப்பட்ட ஹேன்பிட்டகெதர ஞானசீஹ தேரர், சிறைச்சாலையில் காவியுடை அணிந்தவாறே தங்கியிருந்து 18 நூல்களை எழுதியதாகவும், அவர் எழுதிய ‘காமினி சரிதம்’ என்ற பாளி செய்யுள் நூலுக்கு அரச இலக்கிய விருதுகூட வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, அரசியல் செயற்பாட்டாளரும் இலங்கையின் சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவருமான உடகெந்தவல சரணங்கர தேரர், மகசின் சிறைச்சாலையில் கழித்த போராட்டமிக்க வாழ்க்கையை அவரது ‘சட்டனக சடஹன்’ என்ற நூல் தெளிவாக எடுத்துரைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான வரலாற்றுப் பின்னணி இருக்கும்போது, வரலாற்றை முறையாகக் கற்காமல் கட்சிக் காரியாலயங்களில் தயாரித்துக் கொடுக்கப்படும் உரைகளை வாசிக்கும் இத்தகைய சிறுபிள்ளைத்தனமான, தந்திரமான மற்றும் போலித்தனமான ஆட்சியாளர் ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருப்பது கவலைக்குரியது எனவும் பேராசிரியர் ஞானிஸ்ஸர தேரர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அழிவுகரமான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




