– பாட்டளி சம்பிக்க ரணவக்க
மகா சங்கத்தினர் கடந்த சில நாட்களாக வன்முறையற்ற முறையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த போதிலும், அதற்கு ஜனாதிபதி பதிலளித்த விதம் ஆபத்தான போக்கை வெளிப்படுத்துவதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (19) மக்கள் சார்பு கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸார் மற்றும் கட்சி ஆதரவாளர்களின் பலத்தைப் பயன்படுத்தி குறித்த போராட்டங்களைக் கலைக்கவும் ஒடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார். இறுதியில், நகரசபைத் தலைவி ஒருவரைப் பயன்படுத்தி, பொதுமக்களுக்கான வசதிகளில் ஒன்றான கழிப்பறைகள்கூட மூடப்பட்ட நிலை உருவாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இனிமேல் போராட்டங்களை நடத்துவதற்கு பெலவத்தையின் அனுமதி கிடைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுவதாகக் குறிப்பிட்ட அவர், இது மிகவும் ஆபத்தான போக்கு என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நல்லாட்சிக் காலத்தில் மாத்திரம் மக்கள் விடுதலை முன்னணி 560க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியதாகவும், அவற்றில் எவ்வொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு பொலிஸ் அதிகாரம் பயன்படுத்தப்படவில்லை என்றும் ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலைமையானது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்கொண்டுள்ள அரசியல் சூழ்நிலையைத் தெளிவுபடுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக ஊடகங்களில் ஏனையவர்களுக்கு அவதூறான மற்றும் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பதிலளிப்பது அவர்களது அரசியல் கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருந்ததாகவும் ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், நேற்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றுவதற்கு முன்னர் இல்லாத வகையில் எதிர்ப்புப் பிரதிபலிப்புகள் வெளிப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இதன் மூலம் சமூக ஊடகங்களிலும் அவர்கள் பின்னடைவைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை தென்படுவதாக மேலும் தெரிவித்துள்ளார்.




