கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது, திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாகவே தாம் நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்றதாக பலாங்கொடை கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.
நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்ற பின்னர், மருத்துவக் குழுவினர் அங்கு வருகை தந்து தமக்கு சிகிச்சை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் மேலும் கூறியதாவது:
“நல்ல உள்ளம் கொண்ட பக்தர்கள், நாங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது எமக்கு உதவ முன்வந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் எனக்கு சுமார் 102 பாகை காய்ச்சல் ஏற்பட்டிருந்தது.
இதனால், பயணத்தின்போது நாங்கள் ஓய்வெடுப்பதற்காகப் பல இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. எனினும், நாங்கள் பெரும்பாலான இடங்களுக்குச் செல்லவில்லை.
ஏனெனில், நாங்கள் இங்கேயே தொடர்ந்து இருக்க வேண்டியிருந்தது. ஆனால், காய்ச்சலால் நடுங்கிய நிலையில் மிகவும் சிரமப்பட்டதால், விடுக்கப்பட்ட அழைப்புகளின் பேரில் அந்த இடங்களுக்குச் சென்றோம்.
அங்கு சென்ற பின்னர், தனியான மருத்துவக் குழுவினர் வருகை தந்து எமக்குச் சிகிச்சை அளித்தனர். இது மக்களின் விருப்பத்தின் பேரில் இடம்பெற்றதாகும்” என அவர் தெரிவித்தார்.




