உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே குற்றம் இழைத்துள்ளமை நிரூபிக்கப்பட்டால், அவருக்கு நிச்சயமாகத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வாழும் எந்தவொரு குடிமகனும் நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஊழல் வலையமைப்பொன்று காணப்படுவதாகவும், அந்த ஊழல் வலையமைப்பை ராஜபக்ஷவினரே வழிநடத்துவதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷ குழுவினருடன் அவர்களுக்கு ஆதரவான வர்த்தகர்கள், கோடீஸ்வர வர்த்தகர்கள் மற்றும் ஊழல் நிறைந்த அரச ஊழியர்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஊழலுக்கு எதிராகச் செயற்பட்டு வருவதாகவும், ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த சரத் பொன்சேகா, தற்போதைய சிதைந்த எதிர்க்கட்சிக்கு ஒருபோதும் நாட்டில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற இடமளிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாடு பாரிய படுகுழிக்குள் தள்ளப்படுவதைத் தவிர்க்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




