– உதய கம்மன்பில குற்றச்சாட்டு
பிக்குவொருவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக சங்க சபைக்கு அறிவிக்கப்பட்டு, 10 நாட்களுக்குள் பதில் கிடைக்காவிட்டால், சம்பந்தப்பட்ட பிக்குவை சிறைச்சாலை அதிகாரிகள் சிறைக்குள்ளேயே துறவற நிலையிலிருந்து நீக்குவதற்கு வழிவகுக்கும் புதிய திருத்தம் சிறைச்சாலைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தால் ஒருவர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டதற்காக மட்டும், இவ்வாறு பிக்குவின் காவி உடையைக் களையும் அதிகாரம் சிறைச்சாலை நிர்வாகத்திற்கு இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நிலையான கட்டளை இலக்கம் 550இன் கீழ், பிக்குவொருவர் சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும்போதும், மீண்டும் சிறைக்கு அழைத்து வரப்படும்போதும், அவர் சிறைக்கு வந்தபோது அணிந்திருந்த அதே வகையான காவி உடையை அணிந்திருக்க வேண்டும் என மேற்கொள்ளப்பட்ட திருத்தம் பெரும் சர்ச்சைக்குரியது என்றும் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
எனினும், 356ஆவது பிரிவின்படி, சம்பந்தப்பட்ட சங்க சபையினால் துறவற நிலை தொடர்வது உறுதிப்படுத்தப்பட்ட கைதிகள் சிறைத்தண்டனையை காவி உடையுடனேயே அனுபவிப்பதால், அவர்கள் சிறையிலிருந்து வெளியே வரும்போது புதிதாகக் காவி உடை அணிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்தத் திருத்தத்தின் மூலம் காவி உடையை அணிவிக்க முயற்சிப்பது கொலை, பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு, சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கும், தமக்கில்லாத ஆன்மீக சக்திகள் இருப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றி, பாராஜிகா குற்றங்களால் துறவற நிலையை இழந்தவர்களுக்கும் மட்டுமே என உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டின் பௌத்த சக்திகள் போராடியது, நாட்டிற்காகவும் தேசத்திற்காகவும் பௌத்த மதத்திற்காகவும் போராடி சிறைத்தண்டனை அனுபவிக்கும் பிக்குகளின் காவி உடையைப் பாதுகாப்பதற்காகவே அன்றி, குற்றவாளிகளுக்குக் காவி உடை அணியும் உரிமையை வழங்குவதற்காக அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




