பிரவுன்ஸ் ஹில் காணி கொள்வனவு தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவைக் கைது செய்வதற்காக மாத்தறை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை, எலியகந்த வீதியில் அமைந்துள்ள பிரவுன்ஸ் ஹில் பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஜேர்மன் நாட்டுப் பிரஜை ஒருவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் குறித்த தென்னந்தோப்புக் காணி, சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் 60 மில்லியன் ரூபாய் பணத்தைப் பயன்படுத்திக் கொள்வனவு செய்யப்பட்டதாக இந்த வழக்கில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பசில் ராஜபக்சவுடன், அவரது மனைவியின் சகோதரியான அயோமா கலப்பத்தி, அவரது கணவர் திஸ்ஸ கலப்பத்தி மற்றும் முதித ஜயகொடி ஆகியோரும் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிரவுன்ஸ் ஹில் காணி கொள்வனவு தொடர்பான விசாரணைகளின் தொடர்ச்சியாகப் பசில் ராஜபக்சவைக் கைது செய்வதற்குத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.




