சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வேலைத்திட்டம் தொடர்பில் முன்னதாகத் தமது கட்சி விமர்சன நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதிலும், அரசாங்கத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் அந்த வேலைத்திட்டத்துடன் தொடர்ந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், நாட்டுக்கு வேறு மாற்று வழி இருக்கவில்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
CNN சர்வதேச செய்திச் சேவையின் ‘Quest Means Business’ நிகழ்ச்சியில் ரிச்சர்ட் குவெஸ்ட்டுடன் இடம்பெற்ற விசேட நேர்காணலில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களுடன் செயற்பட்ட விதம் தொடர்பில் சாதகமான அனுபவங்கள் இல்லாத காரணத்தினால், தமது கட்சி அதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகப் பிரதமர் தெரிவித்தார். எனினும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, குறித்த ஒப்பந்தம் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர், சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
நல்லாட்சி, ஊழலை ஒழித்தல் மற்றும் நிதி ஒழுக்கத்தைப் பேணுதல் ஆகிய விடயங்களில் இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டதையடுத்து, குறித்த வேலைத்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கத் தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தலுக்குப் பின்னர் நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதும், புதிய அரசாங்கம் தோல்வியடையாது என்பதை நிரூபிப்பதும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களாக இருந்ததாகவும் பிரதமர் கூறினார்.
போர்களால் எந்தத் தரப்புக்கும் நன்மை இல்லை!
மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர், போர்களால் எந்தத் தரப்பினருக்கும் நன்மை ஏற்படாது எனக் குறிப்பிட்டார்.
பிராந்திய அமைதியைப் பாதுகாப்பதுடன், போர் மோதல்கள் இலங்கைக்குப் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நாடு அணிசேராக் வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், எரிபொருள் மற்றும் எரிசக்தி விலைகள் அதிகரிப்பது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவர முயற்சிக்கும் இலங்கை போன்ற நாடுகளுக்குப் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் அவசியம்!
புதிய அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர், தற்போதைய அரசியலமைப்பு 22 தடவைகள் திருத்தப்பட்டுள்ளதாகவும், அதில் உண்மையான குறைபாடுகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
யுத்தம் முடிவடைந்திருந்தாலும், மோதல்களுக்கு அடிப்படையாக அமைந்த காரணிகளைத் தீர்ப்பது, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவது ஆகியவற்றுடன் நிலையானதும் அனைவரையும் உள்ளடக்கியதுமான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்பு அவசியம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.




