கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இரகசியக் கலந்துரையாடல்களை நடத்தி முன்னெடுக்கப்பட்ட அரசியல் சதித்திட்டத்தின் ஒரு கட்டமாகவே விஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற சத்தியாக்கிரகம் அமைந்ததாக இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
குறித்த நட்சத்திர ஹோட்டல்களில் இரகசியக் கலந்துரையாடல்களை நடத்தியவர்களைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அடுத்த கட்டமாக இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சதித்திட்டத்தை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என சமீர பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெற்ற இரகசியக் கலந்துரையாடல்களில் பங்கேற்றவர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்புப் பிரிவினரும் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செயற்படத் தவறினால் நாடு மீண்டும் ஆபத்துக்கு உள்ளாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சமீர பெரேரா மேலும் தெரிவிக்கையில்:
“உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் ஒன்றிணைந்து, கிங்ஸ்பரி ஹோட்டலில் இந்தச் சதித்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். எனவே, முதலில் நாம் அரசாங்கத்திடம் கூறுவது என்னவென்றால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்பதாகும். கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற கலந்துரையாடல் என்ன?
அதன் பின்னர் ஹில்டன் ஹோட்டலில் என்ன செய்தார்கள்?
விஹாரமகாதேவி பூங்காவை முன்னிலைப்படுத்தி, பாரதூரமான அரசியல் சதித்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் முன்னெடுக்கப்படுவதாக நாம் தொடர்ச்சியாகக் கூறி வந்தோம். இது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அடுத்த கட்டமாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அடுத்த கட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர். இதனை இத்துடன் நிறுத்த வேண்டும்.
புலனாய்வுப் பிரிவினரிடமும் பாதுகாப்புப் பிரிவினரிடமும் நாம் கூறுவது என்னவென்றால், இந்தக் குற்றக் குழுவினர் மற்றும் பாதாள உலகக் குழுவினர் எங்கு செல்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பன உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதாகும்.
இது நாட்டின் நலனுக்காகச் செய்யப்பட வேண்டிய ஒரு விடயமாகும். அவ்வாறு செய்யத் தவறினால், நாடு மீண்டும் ஒருமுறை ஆபத்துக்கு உள்ளாகும்.”




