2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் இலங்கையில் புதிதாக 487 எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் 13.3 சதவீத அதிகரிப்பாகும். இதன்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 249 தொற்றாளர்களும், இரண்டாவது காலாண்டில் 238 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.
பதிவான தொற்றாளர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஆண் மற்றும் பெண் தொற்றாளர்களின் விகிதம் 7:1 ஆகக் காணப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் 55 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 48 பேர் ஆண்கள், 6 பேர் பெண்கள் மற்றும் ஒருவர் திருநங்கை ஆவார்.
இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் எய்ட்ஸ் நோய் காரணமாக 8 மரணங்கள் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு காலாண்டிலும் தலா 4 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி, இலங்கையில் இதுவரை எய்ட்ஸ் நோய் காரணமாகப் பதிவான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 820 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 111 மரணங்கள் எய்ட்ஸ் அல்லாத பிற காரணங்களால் ஏற்பட்ட மரணங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டு வரையான மொத்த எச்.ஐ.வி தொற்றாளர்களில் திருத்தப்பட்ட மரண எண்ணிக்கை 1,708 ஆகப் பதிவாகியுள்ளது.
அதேவேளை, தாயிடமிருந்து குழந்தைக்குப் எச்.ஐ.வி வைரஸ் பரவிய 117 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும், 2025 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இவ்வாறான எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




