சமூக நலனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய சட்டங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்களை அரசாங்கம் கொண்டுவரும்போது, சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் அரசாங்கத்திற்கு எதிராகப் பல்வேறு இடங்களில் போராட்டக் குரல் எழுப்பி வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தற்போதைய அரசாங்கத்திடம் எதிர்பார்த்தது சட்டம் மற்றும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதையே எனக் குறிப்பிட்ட அவர், சில தரப்பினர் அரசியல் இலாபங்களை அடையும் நோக்கில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களை ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவை முன்னிட்டு, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கண்டி கரலிய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையை அடைந்திருந்த நாட்டை, சமூக நலன் உறுதிப்படுத்தப்பட்ட நாடாக மாற்றுவதற்கு தற்போதைய அரசாங்கத்தால் முடிந்துள்ளதாகவும், இலங்கை இந்த நிலையை அடைந்துள்ளமை சர்வதேச சமூகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டம் மற்றும் நீதியை நிலைநாட்டுவது அரசாங்கத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் எனத் தெரிவித்த அவர், புதிய சட்டங்களைக் கொண்டுவருவதற்கு எதிராகச் சில தரப்பினர் சிறிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.
மேலும், அதிகாரத்தில் இருந்த காலத்தில் பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையடித்த ஊழல் அரசியல்வாதிகள் தற்போதைய அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நகைப்புக்குரிய விடயம் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.




