இலங்கையில் ஏழு இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் ‘அஸ்வெசும’ நலன்புரிக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாட்டில் வறுமை நிலை மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன. உணவுப் பணவீக்கம் தற்போது 8.8 சதவீதமாக அதிகரித்துள்ளதுடன், வேலையின்மையும் உயர்வடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிப்பதற்குத் தேவையான வருமானத்தில் எவ்வித அதிகரிப்பும் ஏற்படவில்லை. மக்களின் கொள்வனவுத் திறன் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதுடன், ரூபாவின் பெறுமதியும் குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக சமூகத்தில் கடும் அதிருப்தியும் அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த அதிருப்தி எப்போது வீதிப் போராட்டங்களாக வெடிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் வறுமை நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஏழு இலட்சத்துக்கும் அதிகமானோரின் அஸ்வெசும கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளமையே இந்த நிலைமைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.




