கடந்த வெள்ளிக்கிழமை (06) கொழும்பு நகரம் முழுவதும் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தை, கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் உத்தரவுகளை முறையாக நடைமுறைப்படுத்தியிருந்தால் இலகுவாகத் தடுத்திருக்க முடியும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கொழும்பு நகரிலுள்ள அனைத்து கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்புகளையும் புனரமைத்து சுத்தப்படுத்துமாறு பிரதமர் தெளிவான உத்தரவு பிறப்பித்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அந்த உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் கொழும்பு மாநகர முதல்வரிடம் உடனடியாக விளக்கம் கோரி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு நகரின் வடிகால் கட்டமைப்புகள் 30 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியை மாத்திரமே தாங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நவம்பர் 06ஆம் திகதி பதிவான 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியால் வெள்ளம் ஏற்பட்டதாகவும் கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெல்லி பல்தசார் தெரிவித்த கருத்தை அவர் முற்றிலும் தவறானது என நிராகரித்துள்ளார்.
குறித்த கருத்தை அரசாங்கத்தின் தொழில்நுட்ப நிறுவனங்களே பின்னர் மறுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இதைவிட அதிக மழைவீழ்ச்சி பதிவான சந்தர்ப்பங்களில்கூட கொழும்பு தேசிய வைத்தியசாலை இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கியதில்லை என்றும், புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையமும் இத்தகைய பாதிப்பைச் சந்தித்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபையின் நிர்வாகப் பொறுப்பை ஏற்ற பின்னர் எந்தவொரு அபிவிருத்தி அல்லது பராமரிப்புப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், வடிகால் கட்டமைப்புகளை முறையாகச் சுத்தப்படுத்துவதற்குப் பதிலாக, மாநகர முதல்வர் சமூக ஊடகங்கள் ஊடாக மக்களைத் தவறாக வழிநடத்தும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வெள்ள அனர்த்தத்தினால் பொதுமக்களுக்கும் வர்த்தக சமூகத்தினருக்கும் ஏற்பட்ட பாரிய பொருளாதார இழப்புகளுக்கு கொழும்பு மாநகர சபையே முழுமையான பொறுப்பேற்று, போதுமான இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றும் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், பெருமளவில் விளம்பரப்படுத்தப்பட்ட ‘Clean Sri Lanka’ திட்டம் கொழும்பு நகரில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தைத் தடுப்பதற்கு எந்தவிதமான தலையீட்டையும் மேற்கொள்ளாதது கவலைக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மற்றும் மாநகர சபையின் இந்த அலட்சியப் போக்கை, 2025 நவம்பரில் ஏற்பட்ட ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி தொடர்பாக வானிலை ஆய்வுத் திணைக்களம் விடுத்த எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்ட சம்பவத்துடன் ஒப்பிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




