– முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்மொழியும் சிறிய அளவிலான திருத்தங்கள், அச்சட்டத்தின் ஆபத்தான தன்மையை எந்த வகையிலும் குறைக்காது என முன்னாள் நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டத்தில் பயங்கரவாதம் தொடர்பான வரைவிலக்கணத்திற்குள் எவரையும் உள்ளடக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், ஒரு செயல் பயங்கரவாதச் செயலா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் பொலிஸாரிடமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கலால் வரி தொடர்பான குற்றங்கள், காடழிப்பு மற்றும் பலதார மணம் கூட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் வகைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் முன்னாள் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2024 செப்டெம்பர் மாதத்தில் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான வரிசைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்ததுடன், வெளிநாட்டு கையிருப்பு 6 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டிருந்தது.
எனினும், கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாட்டு கையிருப்பு சுமார் ஒரு பில்லியன் டொலர் மட்டுமே அதிகரித்துள்ளதாகவும், 70 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த பணவீக்கம் எதிர்மறை நிலைக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் மீண்டும் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இன்னும் நான்கு ஆண்டுகள் தொடர்ந்தும் செயற்படுவது நாட்டிற்கு மிகவும் சாதகமானதாக அமையும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஹிரு தொலைக்காட்சியின் ‘சலகுண’ அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.




