எரிபொருள் விலை நிர்ணயத்தைக் கண்காணிப்பதற்கும், பெற்றோலியப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு இடையில் நியாயமான போட்டியை உறுதிப்படுத்துவதற்கும் சுயாதீன ஒழுங்குமுறை அமைப்பொன்றை உருவாக்குமாறு நாடாளுமன்ற அரசாங்க நிதி தொடர்பான குழு (CoPF) கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்த விடயம் முன்வைக்கப்பட்டது.
இதன்போது, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் (CPC) தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களுக்கும் இடையிலான எரிபொருள் கொள்வனவுச் செலவுகளில் காணப்படும் வேறுபாடுகள் குறித்து குழு ஆராய்ந்தது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக நாட்டின் எரிபொருள் தேவையின் ஒரு பகுதியைப் பூர்த்தி செய்வதாகவும், தனியார் நிறுவனங்கள் முழுமையாக இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியப் பொருட்களையே சார்ந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால், இந்த இரு தரப்பினரும் எரிபொருளைக் கொள்வனவு செய்து நாட்டிற்குக் கொண்டுவருவதற்கான செலவுகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை எதிர்கொள்வதாகக் குழுவுக்கு அறிவிக்கப்பட்டது.
எனினும், தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் தமது சில்லறை விலைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிக்கும் விலைகளின் அடிப்படையிலேயே நிர்ணயிக்க வேண்டிய நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை தனியார் நிறுவனங்களைப் போட்டியில் பாதகமான நிலைக்குத் தள்ளுகிறதா என்ற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.
அனைத்து சந்தைப் பங்கேற்பாளர்களுக்கும் நியாயமான அணுகுமுறையை உறுதிப்படுத்தும் வகையில், கொள்வனவுச் செலவு, வரிவிதிப்பு மற்றும் விநியோகச் செலவுகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு எரிபொருள் விலைகளை நிர்ணயிக்கும் சுயாதீனமானதும் வெளிப்படையானதுமான கட்டமைப்பின் அவசியத்தை குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
மேலும், பரந்தளவிலான எரிபொருள் மானியத் திட்டங்களுக்குப் பதிலாக, பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பொதுப் போக்குவரத்துச் சேவை வழங்குநர்களுக்கும் இலக்குவைக்கப்பட்ட நிவாரணங்களை வழங்குமாறும் குழு பரிந்துரைத்துள்ளது.
இதற்கிடையில், இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கான முன்மொழியப்பட்ட தரநிலைகள் மற்றும் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் உள்ளிட்ட ஏனைய விடயங்களும் கூட்டத்தில் மீளாய்வு செய்யப்பட்டன.
2026 ஒக்டோபர் 1ஆம் திகதி வெளியிடப்பட்ட 2508/27 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் 2026ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு ஆகியனவும் இதன்போது ஆராயப்பட்டன.




