Homeஉள்நாட்டு செய்தி2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருப்பது என்ன?

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருப்பது என்ன?

spot_img

2027 ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் வெறுமனே அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவுகள் தொடர்பான புள்ளிவிபரங்களை உள்ளடக்கிய ஆவணமாக அமையாமல், நாட்டின் பொருளாதார மாற்றத்திற்குத் தேவையான அடித்தளத்தை உருவாக்கும் வரவு செலவுத் திட்டமாக அமைய வேண்டும் என தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (12) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தை ஆராயும்போது அதில் குறிப்பிடப்பட்டுள்ள வருமானம் மற்றும் செலவினப் புள்ளிவிபரங்களை மாத்திரமன்றி, அமைச்சுக்கள் மற்றும் செலவுத் தலைப்புகளின் அடிப்படையில் அரச நிதி ஒதுக்கப்பட்டுள்ள விதம், அவை முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள அபிவிருத்தித் துறைகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் மக்களின் ஆணைக்கு அமைவாக முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டமாக இம்முறை வரவு செலவுத் திட்டம் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாட்டை மாற்றியமைப்பதற்கு முதலில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது அவசியமாக இருந்ததாகவும், கடந்த இரண்டு வரவு செலவுத் திட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானங்கள் மூலம் எதிர்பார்க்கப்பட்ட காலத்தை விடக் குறுகிய காலத்திலேயே அந்த இலக்கை அடைய முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து உண்மையான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக முதலீடுகளை அதிகரித்தல், புதிய பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், மக்களை அவற்றுடன் இணைத்துக்கொள்ளுதல் மற்றும் தேவையான மனித வளங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய உட்கட்டமைப்பு வசதிகள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்கள் ஆகியவற்றுக்காக அரச நிதி ஒதுக்கப்பட்டுள்ள விதம் வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பின்போது தெளிவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் ஊடாக மூலதனச் செலவினங்களுக்காக 2 ட்ரில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடிக்கு மேலதிகமாக, டிட்வா புயல் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை போன்ற எதிர்பாராத சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார வேலைத்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க அரசாங்கத்தால் முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச நிதி ஒழுக்கத்தைப் பேணுதல், அரச செலவினங்களில் மோசடி, ஊழல் மற்றும் வீண் விரயங்களுக்கு இடமளிக்காமை, வரி வருமானத்தை மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்குப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, வருமானம் மற்றும் செலவினங்களை முறையாக நிர்வகித்து கடன் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதும் முக்கியமானது எனக் குறிப்பிட்ட அவர், நாட்டின் பொருளாதார மாற்றத்திற்குத் தேவையான அடித்தளத்தை உருவாக்குவதே இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் என மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் காவலில்

அநுராதபுரம் - ருவன்வெலிசாய  வளாகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம்...

மதுபானங்களின் விலைகளை உயர்த்த உற்பத்தி நிறுவனங்கள் தயார்

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மதுவரி (Excise Duty) திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரி அதிகரிக்கப்பட்டால், மதுபானங்களின்...

மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், தற்போது அரசாங்கத்தின் மீதான மக்களின் ஆதரவும் நன்மதிப்பும் அதிகரித்துள்ளதாக அமைச்சர்...

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, 1.66 கோடி ரூபாய்க்கும் அதிகமான அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள...

More like this

கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் காவலில்

அநுராதபுரம் - ருவன்வெலிசாய  வளாகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம்...

மதுபானங்களின் விலைகளை உயர்த்த உற்பத்தி நிறுவனங்கள் தயார்

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மதுவரி (Excise Duty) திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரி அதிகரிக்கப்பட்டால், மதுபானங்களின்...

மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், தற்போது அரசாங்கத்தின் மீதான மக்களின் ஆதரவும் நன்மதிப்பும் அதிகரித்துள்ளதாக அமைச்சர்...