2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, அனைத்து அரச சேவைகளையும் உள்ளடக்கும் வகையில் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை கணிசமான அளவில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆசிரியர் சேவையின் தரம் 3 மற்றும் தரம் 2 ஊழியர்களின் சம்பளம் 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21,570 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இது 68.50 சதவீத சம்பள உயர்வாகும்.
அதேவேளை, ஆசிரியர் சேவையின் முதலாம் தரத்தினருக்கான சம்பள அதிகரிப்பு 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 41,810 ரூபாவாகும். இது 73.65 சதவீத சம்பள உயர்வாகப் பதிவாகியுள்ளது.
ஆசிரியர் ஆலோசகர் சேவையின் முதலாம் தரத்தினருக்கான சம்பளமும் 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அடுத்த ஆண்டு 61.38 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.
அதிபர் சேவையிலும் அடுத்த ஆண்டு கணிசமான சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது. இதன்படி, அதிபர் சேவையின் மூன்றாம் தரத்தினருக்கு 30,105 ரூபாவும், முதலாம் தரத்தினருக்கு 45,395 ரூபாவும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது.
அரச சேவையின் ஏனைய துறைகளிலும் குறிப்பிடத்தக்க சம்பள உயர்வு அடுத்த ஆண்டு வழங்கப்படவுள்ளது.
இதன்படி, முதலாம் தர மருத்துவ அதிகாரிகளுக்கு 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 75.02 சதவீத சம்பள உயர்வு கிடைக்கவுள்ளது.
மேலும், பொது சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் சேவையினருக்கும் அடுத்த ஆண்டு அதிக சதவீதத்தில் சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது.
அத்துடன், அலுவலகப் பணியாளர்கள், சாரதிகள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஏனைய அனைத்து அரச ஊழியர்களினதும் சம்பளம் அடுத்த ஆண்டு அதிகரிக்கப்படவுள்ளதாக 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.




