இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதிக்கான எந்தவொரு வரிச்சலுகையும் வழங்கப்படாதது தொடர்பாக வாகன இறக்குமதியாளர்கள் குழுவொன்று நிதி அமைச்சிடம் விளக்கம் கோரியுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் இத்தகைய வரிச்சலுகை எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அது வழங்கப்படாததால் எதிர்காலத்தில் வாகனங்களின் விலைகளில் எவ்விதக் குறைவும் ஏற்படாது என வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ, வாகன இறக்குமதிக்கான வரிச்சலுகை வழங்கப்படாததற்கான காரணம் குறித்து தமது சங்கம் நிதி அமைச்சிடம் விளக்கம் கோரியதாகத் தெரிவித்தார்.
இதன்போது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து நிதி அமைச்சு விளக்கமளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, வாகன இறக்குமதிக்கு தற்போது நடைமுறையில் உள்ள மேலதிக வரி (Surcharge) உள்ளிட்ட ஏனைய வரிகள் தொடர்ந்து மாற்றமின்றி அமுலில் இருப்பதால், வாகனங்களின் விலைகளில் எந்தவிதக் குறைவும் ஏற்படாது என அரோஷ ரொட்ரிகோ மேலும் தெரிவித்தார்.




